புதிய அரசமைப்பு தொடர்பில் தமிழ், முஸ்லிம் கட்சிகள் மாநாட்டைக் கூட்டுங்கள்! – சம்பந்தனிடம் மனோ கோரிக்கை

“புதிய அரசமைப்பு ஒன்றை நோக்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நியாயமான முன்னெடுப்புகளுக்கு ஒத்துழைப்பு வழங்க தமிழ் முற்போக்குக் கூட்டணி தயாராகவே இருக்கின்றது. ஆகவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், புதிய அரசமைப்பு தொடர்பில் அனைத்துத் தமிழ், முஸ்லிம் சிறுபான்மை கட்சிகளின் மாநாடு ஒன்றை உடன் கூட்ட வேண்டும் என்பது தமிழ் முற்போக்குக் கூட்டணியின் யோசனையாகும்.”

– இவ்வாறு தெரிவித்தார் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய அலுவல்கள் அமைச்சருமான மனோ கணேசன்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

“புதிய அரசமைப்பு கலந்துரையாடல் மீண்டும் ஆரம்பிக்கப்பட வேண்டும், அரசு சர்வதேசத்துக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் கருத்துக்களை நான் ஏற்றுக்கொள்கிறேன்

அரசின் பிரதான பங்காளிக் கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகிய இரண்டு கட்சிகளுமே புதிய அரசமைப்புப் பின்னடைவுகளுக்குப் பிரதான காரணங்கள் ஆகும்.

ஆனால், இந்த பின்னடைவுகளையிட்டு நான் ஆச்சரியப்படவில்லை. தென்னிங்கை பெரும்பான்மைக் கட்சித் தலைமைகளிடம் அரசியல் தீர்வுக்கான மனோதிடம் இல்லை என நான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பேயே அறிவித்திருந்தேன்.

இதை அரசமைப்பு வழிகாட்டல் குழுவிலேயே நான் பகிரங்கமாகக் கூறியிருந்தேன். இதை நாட்டுக்கு உள்ளேயும், வெளியேயும் சென்று தமிழ் மக்கள் மத்தியிலும் கூறியிருந்தேன்.

நான் அன்று சொன்னது, இன்று சரியானதையிட்டு நான் மிகவும் கவலையே அடைகின்றேன்.

1972ஆம், 1978ஆம் ஆண்டுகளின் அரசமைப்புகள் தமிழ் மக்களின் ஒப்புதல் ஆணைகளைப் பெறாமல் கொண்டுவரப்பட்டவை என சம்பந்தன் கூறுவது முற்றிலும் உண்மை.

எனவே, அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய புதிய அரசமைப்பைத் தமிழர் கோருவதில் மிக வலுவான அரசியல் நியாயம் இருக்கின்றது.

இந்த நாட்டு அரசமைப்புகள், இந்நாட்டில் வாழும் தமிழர்களின் ஆட்சியுரிமையையும், இறைமையையும் அங்கீகரிப்பனவையாக அமைய வேண்டும்.

எனவே, இன்றைய நிலையில் புதிய அரசமைப்பு ஒன்றை நோக்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நியாயமான முன்னெடுப்புகளுக்கு ஒத்துழைப்பு வழங்க தமிழ் முற்போக்குக் கூட்டணி தயாராகவே இருக்கின்றது.

ஆகவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர், புதிய அரசமைப்பு தொடர்பில் அனைத்துத் தமிழ், முஸ்லிம் சிறுபான்மை கட்சிகளின் மாநாடு ஒன்றை உடன் கூட்ட வேண்டும் என்பது தமிழ் முற்போக்குக் கூட்டணியின் யோசனையாகும்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *