ஐ.நா. விசேட அறிக்கையாளருடன் ஆளுநர் ராகவன் முக்கிய சந்திப்பு! – வடக்கு நிலைமைகள் குறித்து விளக்கம்

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சுதந்திரமாக ஒன்றுகூடுவதற்கான உரிமைகள் தொடர்பான ஐ.நாவின் விசேட அறிக்கையாளர் கிளெமென்ற் நயாலெட்சோசி வூலுக்கும் வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனுக்கும் இடையிலான சந்திப்பு நேற்றுப் பிற்பகல் கொழும்பில் நடைபெற்றது.

வடக்கு மாகாண ஆளுநர் என்ற ரீதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனயுடனும் அரசுடனும் இணைந்து மாகாணத்தினுள் வசிக்கும் பொதுமக்களின் வாழ்க்கையை மேம்படுத்த முன்னெடுக்கும் நிலம், நீர், நிதி மற்றும் நீதி தொடர்பான செயற்பாடுகள் தொடர்பில் ஐ.நா. விசேட பிரதிநிதிக்கு இதன்போது விளக்கமளித்தார்.

காணியற்ற மக்களுக்குக் காணிகளை வழங்குவது குறித்தும், குடிதண்ணீர் மற்றும் விவசாயத்துக்குத் தேவையான நீரினை வழங்குவதற்கு வடமராட்சி களப்புத் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் குறித்தும், வடக்கு மாகாணத்தில் கூட்டுறவு அபிவிருத்தி வங்கியொன்றை ஸ்தாபிப்பது குறித்தும் ஆளுநர் இதன்போது விரிவாக விளக்கமளித்தார்.

இதேவேளை, இலங்கையில் ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பின்னர் தடைப்பட்டிருந்த பாதுகாப்புப் படைகளின் வசமிருந்த பொதுமக்களின் காணிகள் படிப்படியாக விடுவிப்பது தற்போது மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதையும் இதன்போது ஆளுநர் சுட்டிக்காட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *