கல்முனைப் பிரச்சினைக்கு ஓகஸ்ட் 5ஆம் திகதிக்கு முன் சமரசத் தீர்வைக் காண்பது பிரதமர் ரணிலின் பொறுப்பு! – மு.கா. தலைவர் ஹக்கீம் சுட்டிக்காட்டு

“கல்முனையில் தோன்றியுள்ள நிர்வாக ரீதியான பிரச்சினைகளுக்கு எந்த தரப்புக்கும் பாதிப்பில்லாத வகையில் தீர்வுகாண வேண்டிய பொறுப்பு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு இருக்கின்றது. ஐக்கிய தேசிய முன்னணியின் அங்கத்துவக் கட்சிகள் கூட்டணியில் கைச்சாத்திடும் நிகழ்வு எதிர்வரும் ஓகஸ்ட் 5ஆம் திகதி நடைபெறவிருப்பதால், அதற்கு முன்னர் பிரதமர் நல்லதொரு முடிவை அறிவிப்பார் என நான் நம்புகின்றோம்.”

– இவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி சபை வழங்குவது தொடர்பில், சாய்ந்தமருது சுயேச்சைக்குழு உறுப்பினர்கள் மற்றும் கட்சிப் பிரதிநிதிகளுடனான பரஸ்பர சந்திப்பு நேற்றுப் புதன்கிழமை ரவூப் ஹக்கீமின் இல்லத்தில் நடைபெற்றது.

இந்தச் சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ், கல்முனை மாநகர சபையின் சுயேச்சைக்குழு உறுப்பினர்கள், சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளிவாசல் தலைவர் வை.எம். ஹனீபா, சட்டம், ஒழுங்கு அமைச்சின் மேலதிக செயலாளர் ஏ.எல்.எம். சலீம் மற்றும் மு.கா. சாய்ந்தமருது பிரதிநிதிகளான யஹ்யாகான், அப்துல் பஷீர், ஏ.எல்.எம். புர்கான், அலியார் நஸார்தீன், மன்சூர் பாமி, எம். முபாரக் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இங்கு கருத்து தெரிவித்த ரவூப் ஹக்கீம் மேலும் கூறியதாவது:-

“கல்முனையை நான்காகப் பிரித்து சாய்ந்தமருதுக்கு சபை வழங்கும் தீர்மானம் இருக்கத்தக்க நிலையில், தற்போது கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரச்சினை பூதாகரமாகியுள்ளது. பேரினவாத சக்திகளுடன் இணைந்து இப்பிரச்சினை தேசிய பிரச்சினையாக உருமாற்றம் பெற்றுள்ளது. மக்கள் செல்வாக்கை இழந்துள்ள தமிழ் அரசியல்வாதிகள் சிலர் இப்பிரச்சினையில் அரசியல் இலாபம் தேட முனைகின்றனர்.

அரசுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையைச் சாதகமாகப் பயன்படுத்தி, கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு கணக்காளர் நியமிப்பதற்கான முஸ்தீபு மேற்கொள்ளப்பட்டது. அந்தச் சமயத்தில் அரசு தோற்றுப்போகக்கூடாது என்ற சூழ்நிலை காணப்பட்டது. நம்பிக்கையில்லாப் பிரேரணை நிறைவேறுவது அரசுக்கு மாத்திரமல்ல, அப்போது எங்களுக்கும் பிரச்சினைதான்.

நாங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையுடன் பேசித்தான் இதற்கு நிரந்தர தீர்வு காணவேண்டும். கல்முனை விடயத்தில் தமிழ்த்தரப்பு எவ்வளவு தூரம் விட்டுக்கொடுப்பு செய்வார்கள் என்பதுதான் இதிலுள்ள பிரச்சினை. முஸ்லிம் தரப்பில் விட்டுக்கொடுப்பு செய்தாலும் அதற்கும் சில எல்லைகள் இருக்கின்றன. இந்தச் சந்தர்ப்பத்தில் எந்தத் தரப்புக்கும் பாதிப்பில்லாமல் தீர்வைப் பெற்றுத்தர வேண்டிய தார்மீகப் பொறுப்பு பிரதமருக்கு இருக்கின்றது.

முன்னைய ஆட்சியின்போதே கல்முனை பிரச்சினையைத் தீர்த்திருக்கலாம் என்று சிலர் கூறுகின்றனர். ஆனால், கல்முனையில் வாழும் தமிழ், முஸ்லிம் மக்களின் இணக்கப்பாடின்றி சர்வாதிகார ரீதியில் இதற்குத் தீர்வுகாண முடியாது.

இந்தச் சூழ்நிலையில் எங்களைக் கைவிட்டு விடவேண்டாமென மருதமுனை மக்களும் நற்பிட்டிமுனை மக்களும் இப்போது கூறத் தொடங்கியுள்ளனர். ஏக காலத்திலேயே இவை எல்லாவற்றும் தீர்வு காணப்பட வேண்டும்.

தீர்வுகள் புத்திசாதுரியத்தால் சாதிக்கப்பட வேண்டும். அதைவிடுத்து மக்களை உணர்ச்சி வசப்படுத்தி தீர்வுகளைப் பெற்றுக்கொள்ள முடியாது. இப்படியான தீர்மானங்கள் இளைஞர் சமுதாயத்துக்குத் தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடக் கூடாது. தேவையில்லாத பிரச்சினைகள் உருவாகுவதிலிருந்து நாம் தவிர்ந்துகொள்ள வேண்டும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஓர் இணக்கப்பாட்டுக்கு வந்து, கல்முனையிலுள்ள நிர்வாக ரீதியான பிரச்சினைகள் அனைத்தும் விரைவில் தீர்க்கப்படும். கல்முனையை ஏககாலத்தில் நான்காகப் பிரித்து, எல்லாப் பிரச்சினைகளும் தீர்வுவரும் நேரத்தில் சாய்ந்தமருதுக்கும் தனியான உள்ளூராட்சி சபை வழங்கப்படும்” – என்றார்.

இங்கு கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் கூறியதாவது:-

“கல்முனையை நான்காகப் பிரிப்பதாக மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தின் பின்னர், தமிழ்த் தரப்புடன் பல்வேறு கட்ட பேச்சுகள் நடந்துள்ளன. தமிழ்த்தரப்பு அவர்களுடைய முன்மொழிவுகளைச் சமர்ப்பித்திருக்கிறார்கள். அதேபோன்று நாங்களும் எங்களது முன்மொழிவுகளைச் சமர்ப்பித்திருக்கின்றோம். அமைச்சர் வஜிர அபேவர்த்தனவுடன் இது தொடர்பில் கலந்துரையாடியிருக்கின்றோம்.

நானும், தலைவர் ரவூப் ஹக்கீமும், ரிஷாத் பதியுதீனும் பிரதமரின் ஏற்பாட்டில் அமைச்சர் வஜிர அபேவர்தனவைச் சந்தித்து கல்முனை விவகாரம் தொடர்பில் கலந்துரையாடினோம். இந்தப் பேச்சில முன்னேற்றம் காணப்பட்டுள்ளது. எங்களது தீர்மானங்களைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அறிவிப்பதாக அவர் கூறியுள்ளார். விரைவில் இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படுவதற்கான உத்தரவாதத்தை அவர் தந்திருக்கின்றார்.

சாய்ந்தமருதுக்கு நகர சபை வழங்குவதற்கான அமைச்சரவைப் பத்திரம் தயாராகவுள்ளது. கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரச்சினை தீர்க்கப்பட்ட பின்னர், கல்முனையை நான்காகப் பிரித்து சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி சபை வழங்கப்படும். இந்தப் பிரச்சினைகள் எல்லாவற்றும் ஒரே நேரத்தில் தீர்வு காணப்படும்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *