பெரும் பரபரப்புக்கு மத்தியில் நாடு திரும்பினார் கோட்டாபய! – மஹிந்த, பஸிலுடன் தனித்தனியே சந்திப்பு; வெள்ளிக்கிழமை நீதிமன்றில் ஆஜராவார்

அரசியல் கட்சிகளுக்கிடையே ஜனாதிபதி வேட்பாளர் விவகாரம் சூடுபிடித்துள்ள நிலையில், பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளரும் பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுபவருமான கோட்டாபய ராஜபக்ச நேற்றிரவு (23) நாடு திரும்பியுள்ளார்.

இருதய சத்திர சிகிச்சைக்காகச் சிங்கப்பூருக்குச் சென்றிருந்த அவர், சத்திர சிகிச்சையின் பின்னர் வைத்தியர்களின் கண்காணிப்பில் இருந்தார். பொது எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் சிங்கப்பூருக்குச் சென்று அவரைப் பார்வையிட்டு சுகநலம் விசாரித்தனர்.

மருத்துவ பரிசோதனைகள் முழுமையாக நிறைவடைந்த பின்னரே அவர் நேற்றிரவு நாடு திரும்பியுள்ளார்.

வழக்கு ஒன்றில் நாளைமறுதினம் வெள்ளிக்கிழமை அவர் நீதிமன்றில் ஆஜராகவுள்ளார்.

வெளிநாட்டில் தங்கியிருந்து சிகிச்சை பெற அவருக்கு இம்மாதம் 24ஆம் திகதி (இன்று) வரை நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

நாளை முதல் விகாரைகளுக்கு ஆன்மீகப் பயணம் மேற்கொள்ளவுள்ள கோட்டாபய ராஜபக்ச, முக்கிய சந்திப்புகளையும் நடத்தவுள்ளார். குறிப்பாக தனது சகோதரர்களான மஹிந்த ராஜபக்ச, பஸில் ராஜபக்ச ஆகியோரையும் தனித்தனியே சந்திக்கத் திட்டமிட்டுள்ளார்.

ஆகஸ்ட் 11ஆம் திகதி முதல் செயற்பாட்டு அரசியலில் குதிக்க வேண்டி இருப்பதால் அதற்கான முன்னேற்பாடுகளில் கோட்டாபயவும், அவரின் சகாக்களும் தீவிரமாக இறங்கவுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *