தேர்தலில் களமிறங்க தயார் நிலையில் சஜித்! – தமிழருக்குத் தீர்வு வழங்குவதே முதல் இலக்கு என்றும் தெரிவிப்பு

“ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்குவதற்கு எந்நேரமும் தயாராகவே இருக்கின்றேன். ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டதும் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு வழங்குவதே எனது முதல் இலக்கு. அந்தத் தீர்வை வடக்கு, கிழக்கு மக்களின் ஏகப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடியே தயாரிப்பேன்.”

– இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ளது. தெற்கின் பிரதான கட்சிகள் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருகின்றன. தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசன ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் போட்டியிடுவார் என்றும், மஹிந்த ராஜபக்ச அணியின் சார்பாகக் கோட்டாபய ராஜபக்ச களமிறக்கப்படுவார் என்றும் கருத்துக்கள் வெளியாகி வருகின்றன. ஐக்கிய தேசியக் கட்சி தமது ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது தொடர்பில் பகிரங்கப்படுத்தவில்லை. எனினும், அந்தக் கட்சியின் சார்பாக சஜித் பிரேமதாஸ களமிறக்கப்படலாம் என்று எதிர்வு கூறப்படுகின்றது.

இந்தநிலையில், ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கும் பட்சத்தில் தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பாக எவ்வாறான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளீர்கள் என்று கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்குவதற்கு எந்நேரமும் தயாராக இருக்கின்றேன். கட்சியின் உயர்பீடத்தின் அனுமதிக்காகவே காத்திருக்கின்றேன்.

ஆட்சிக்கு வந்ததும் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களை ஓரணியில் கொண்டுவருவதே எனது முதல் இலக்காக இருக்கும். நாட்டில் நீண்டகாலமாகப் புரையோடிப் போயுள்ள இனப் பிரச்சினைக்கு தீர்வை உருவாக்குவேன். ஆட்சிக்கு வந்ததும் இதுவே எனது முதலாவது செயற்பாடாக இருக்கும். வடக்கு, கிழக்கில் உள்ள மக்களின் ஏகப்பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி, அனைவருக்கும் பொருத்தமான அரசியல் தீர்வைப் பெற்றுக் கொள்வதே எனது நிலைப்பாடாக உள்ளது.

வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் அனைத்து இடங்களிலும் மத வன்முறைகளை உருவாக்கும் நோக்குடன் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அவற்றுக்கு முடிவு கட்டி அனைத்து இன மக்களும் சுபீட்சமான வாழ வழி செய்யப்படும். எனது தந்தையின் வழியில் எனது மக்கள் பணி தொடரும்” – என்றார்.

அதேவேளை, கடந்த திங்கட்கிழமை யாழ்ப்பாணம் வந்திருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க அரசியல் தீர்வுக்கு மிக மிக நெருங்கி வந்துவிட்டதாகக் குறிப்பிட்டதுடன், இன்னும் இரண்டு வருடங்களுக்கு இடையில் தீர்வை அடைந்துவிட முடியும் என்றும் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

தமிழர்கள் எதிர்பார்க்கின்ற அதிகாரப் பகிர்வு சிங்களவர்களும் முஸ்லிம்களும் ஏனையவர்களும் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் இருக்கவேண்டும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *