பேஸ்புக் நிறுவனத்துக்கு ரூ.70,000 கோடி அபராதம்! – அமெரிக்க வர்த்தக ஆணையம் ஒப்புதல்

தனிநபர் தகவல்களை வர்த்தக ரீதியாக பகிர்ந்து கொண்டது தொடர்பாக பேஸ்புக் நிறுவனத்துக்கு ரூ.70 ஆயிரம் கோடி அபராதம் விதிக்க, அமெரிக்க வர்த்தக ஆணையம் ஒப்புதல் வழங்கியுள்ளதாக அமெரிக்காவின், ‘வால் ஸ்ட்ரீட்’ பத்திரிகை தகவல் வெளியிட்டுள்ளது.

சமூக இணையதளமான பேஸ்புக்கை உலகம் முழுவதும் 200 கோடி பேர் பயன்படுத்துகின்றனர். இவர்களின் தனிப்பட்ட தகவல்கள் அனைத்தும் பேஸ்புக் வசம் உள்ளது. பேஸ்புக் நிறுவனத்திடம் பல நிறுவனங்கள் வர்த்தக பங்குதாரர்களாக உள்ளன. அதில், ஒன்று ‘கேம்பிரிட்ஜ் அனலிடிகா.’ இது, அரசியல் ஆலோசனை நிறுவனமாக செயல்படுகிறது.

கடந்த 2016ஆம் ஆண்டு நடந்த அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில், டிரம்ப் பிரசார குழுவினருக்கு இந்த நிறுவனம்தான் ஆலோசகராக இருந்தது.

இந்த நிறுவனம் பேஸ்புக் நிறுவனத்திடம் இருந்து கோடிக்கணக்கான மக்களின் தனிப்பட்ட தகவல்களை பெற்று, தேர்தல் பிரசார வியூகங்கள் வகுத்தது கண்டறிப்பட்டது.

இவ்வாறு பேஸ்புக் நிறுவனம் முறைகேடாக நடந்து கொண்டது பற்றி அமெரிக்காவின் ஒழுங்குமுறை அமைப்பான ‘பெடரல் வர்த்தக ஆணையம்’ (எப்டிசி) தனது விசாரணையை கடந்தாண்டு மீண்டும் தொடங்கியது.

அதில், தனிநபர் தகவல்களை பேஸ்புக் நிறுவனம் ஒப்பந்த விதிமுறைகளை மீறி பகிர்ந்து கொண்டது உறுதி செய்யப்பட்டதால், அதற்கு ரூ.70 ஆயிரம் கோடி அபராதம் விதிக்கலாம் என முடிவு செய்யப்பட்டது.

இதற்கான, ஒட்டெடுப்பில் 3 உறுப்பினர்கள் ஆதரவாகவும், ஜனநாயக கட்சியைச் சேர்ந்த 2 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்தனர்.

பெரும்பான்மை அடிப்படையில் இந்த அபராதத்துக்கு எப்டிசி ஒப்புதல் அளித்துள்ளது. இதுவரை, இந்த அமைப்பு விதித்த அபராதங்களில் இதுதான் மிகவும் அதிகம். இதற்கு, அமெரிக்க நீதித்துறையிடம் அனுமதி பெற வேண்டும். அங்கும் இந்த அபராதம் உறுதி செய்யப்பட்டால், பேஸ்புக் நிறுவனம் ரூ.70 ஆயிரம் கோடி அபராதம் செலுத்த வேண்டியிருக்கும்.

பேஸ்புக் நிறுவனத்தை
உடைக்க தகுந்த நேரம்

‘நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிக்கையில் எழுதப்பட்டுள்ள தலையங்கத்தில், ‘பேஸ்புக் நிறுவனத்தை உடைக்க இதுதான் சரியான நேரம். இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் சேவைகளை பேஸ்புக் நிறுவனத்திடம் இருந்து தனியாக பிரிக்க வேணடும். பேஸ்புக் நிறுவனத்தின் வளர்ச்சியில் மார்க் ஜூகர்பெர்க் கவனம் செலுத்தியது, தனிநபர் தகவல்களின் பாதுகாப்பை தியாகம் செய்ய வழிவகுத்து விட்டது’ என கூறப்பட்டுள்ளது.

சொற்பத் தொகை

பேஸ்புக் நிறுவனத்துக்கு விதிக்கப்பட உள்ள ரூ.70 ஆயிரம் கோடி அபராதம் என்பது, அந்த நிறுவனத்துக்கு மிக மிக சொற்பமான தொகை. இந்த நடவடிக்கையால் அதன் வர்த்தகமும் பாதிக்க வாய்ப்பில்லை என கூறப்படுகின்றது.

இந்தாண்டின் முதல் 3 மாதத்திலேயே பேஸ்புக் நிறுவனத்தின் இலாபம் கடந்தாண்டை விட 26 சதவீதம் அதிகரித்து ரூ. 2 இலட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இந்த அபராதத்துக்குப் பிறகும் பேஸ்புக் நிறுவனத்தின் 1 பங்கு 1.8 சதவீதம் உயர்ந்து ரூ.14 ஆயிரமாக இருந்தது.

கடுமையான தடை விதிக்க வேண்டும்

எப்டிசி விதித்த அபராதம் பற்றி பேஸ்புக் நிறுவனம் உடனடியாக எந்தக் ருத்தும் தெரிவிக்கவில்லை. தனிநபர் தகவல்களைக் கண்காணிப்பது உட்பட இன்னும் கடுமையான தடைகளை பேஸ்புக் நிறுவனத்துக்கு விதிக்க வேண்டும் எனவும், இந்த அபராதத்துக்கு பேஸ்புக் நிறுவன தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூகர்பெர்க் பொறுப்பேற்க வேண்டும் எனவும் பேஸ்புக் விமர்சகர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *