ஆட்சியாளரைத் தீர்மானிக்கும் சக்தியாக தமிழ்க் கூட்டமைப்பு!

மீண்டும் நம்பிக்கையில்லாப் பிரேரணையை முறியடித்து தனது அரசின் ஆட்சியைத் தக்க வைத்துக்கொண்டுள்ளார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.

தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையில் உடனடியாக வரக்கூடியது ஜனாதிபதித் தேர்தலே. பெரும்பாலும் அது இந்த வருட இறுதியில் நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இன்னும் நான்கு, ஐந்து மாதங்களுக்குள் அத்தேர்தலை நடத்தியாக வேண்டும்.

அதற்கு முன்னர் ரணிலின் தற்போதைய அரசு கவிழ்வதற்கான வாய்ப்புகள் இனி மிக, மிகக் குறைவு என்பதை நேற்றுமுன்தினம் நடந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு உறுதிப்படுத்தியுள்ளது.

நாடாளுமன்றத்தில் தற்சமயம் 14 உறுப்பினர்களைக் கொண்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்புதான் தென்னிலங்கையின் ஆட்சியாளர்கள் யார் என்பதைத் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கின்றது. அதையும் நேற்றுமுன்தினம் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற வாக்கெடுப்பு அம்பலப்படுத்தி நிற்கின்றது.

கூட்டமைப்பின் 14 எம்.பிக்களும் ஒன்று சேர்ந்து ரணில் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். அதனால் ரணிலின் அரசு 27 மேலதிக வாக்குகளால் தப்பிப் பிழைத்தது.

அதேபோல, ரணிலின் அரசு மீது நம்பிக்கையில்லை எனக் கருதி, நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாகக் கூட்டமைப்பின் 14 எம்.பிக்களும் வாக்களித்திருப்பார்களாயின் ரணிலின் அரசு ஒரு வாக்கினால் கவிழ்ந்திருக்கும் நிலைமை ஏற்பட்டிருக்கும் என்பதும் கண்கூடு.

நாடாளுமன்றத்தில் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை மீது உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் எல்லோரும் ரணிலின் அரசு மீதான தமது அவநம்பிக்கையை – நம்பிக்கையீனத்தை வரிசைப்படுத்தி, புட்டுப்புட்டு வைத்தனர். அந்த உரைகளை – குறிப்பாகக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஐயாவின் உரையை செவிமடுத்த எவரும் அவர் ரணிலின் அரசுக்கு எதிராக வாக்களிக்கும் முடிவுக்கு வந்துவிட்டார் என்றுதான் கருதியிருப்பார்கள்.

இதேபோல, கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனும் ரணிலின் அரசை வாங்கு வாங்குகென்று வாங்கினார்.

“இந்த அரசை நம்பமுடியாது. இந்த அரசு வடக்கு மக்களை ஏமாற்றி விட்டது. புதிய அரசமைப்பு ஊடாகத் தேசிய இனப் பிரச்சினைக்குத் தீர்வு தருவார்கள் என்றார்கள். எழுபதுக்கும் அதிகமான கூட்டங்கள், அமர்வுகளை நடத்தினார்கள். ஆனால், கடைசியாக எமது மக்களுக்கு எதுவுமே கிடைக்கவே இல்லை. எங்கள் மக்கள் இப்படித் தொடர்ந்து ஏமாற்றப்பட வேண்டுமா?” – இப்படி எல்லாம் காட்டமாக கேட்டார் ஈ.சரவணபவன் எம்.பி.

ஆனால், கடைசியாக அதே ரணில் அரசைக் காப்பாற்ற வேண்டிய நிர்ப்பந்தத்தில்தான் நாங்கள் இருக்கின்றோம் என்ற யதார்த்த நிலைமையை சம்பந்தனும், சரவணபவனும் வெளிப்படுத்த வேண்டியவர்களானார்கள்.

“இந்த (ரணிலின்) அரசைத் தோற்கடித்து நாம் எத்தகைய புதிய அரசை உருவாக்க முடியும்? மீண்டும் ராஜபக்ச அரசு போன்ற ஒன்று வர இடமளிக்க முடியுமா? ஆகவே, ‘தெரியாத தேவதையை விட, தெரிந்த பிசாசு நல்லது’ என்ற அடிப்படையில் ரணில் அரசைக் காப்பற்றுகின்றோம்” – என்றார் சரவணபவன் எம்.பி.

நம்ப முடியாத அரசு என்று தாம் கூறும் அரசையே காப்பாற்றிக் காபந்து பண்ண வேண்டிய துரதிஷ்ட இக்கட்டில் சிக்கியிருக்கின்றது கூட்டமைப்பு.

இதே கருத்தையே கூட்டமைப்புத் தலைவர் சம்பந்தனும் நேற்றுமுன்தினம் சபையில் முன்வைத்தார்.

“தற்போதைய அரசாங்கத்தை வீழ்த்தினால் மீண்டும் மஹிந்த ராஜபக்ச அரசே உருவாகும். கடந்த காலத்தில் ராஜபக்ச அரசின் கீழ் தமிழ் மக்கள் பட்ட துன்பங்களை நாம் மறக்கவில்லை. ஆகவேதான் நாம் ரணில் அரசை வீழ்த்தாமல் உள்ளோம்” என்று விளக்கமளித்தார் சம்பந்தன்.

ஆக, இப்போது ரணிலின் அரசு தன்னுடைய தகைமையினால் – அல்லது நம்பகத் தன்மையினால் – அதன் மீது நாடாளுமன்ற உறுப்பினர்கள் வைத்துள்ள நம்பிக்கையினால் தப்பிப் பிழைக்கவில்லை என்பது தெளிவு.

ரணில் அரசுக்கு மாற்றாக வரக் கூடிய மஹிந்த ராஜபக்சவின் உத்தேச அரசு மீது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உள்ள அச்சம் – பயம் – பீதியே, ரணில் அரசைக் காப்பாற்றித் தக்க வைத்திருக்கின்றது என்பதுதன் உண்மை.

– ‘காலைக்கதிர்’ ஆசிரியர் தலையங்கம் (13.07.2019)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *