ஆஸியை வீழ்த்தி இறுதிக்குள் நுழைந்தது இங்கிலாந்து அணி!

நடைபெற்று வருகின்ற உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டித் தொடரில் நடப்பு சம்பியன் ஆஸ்திரேலிய அணியின் உலகக் கிண்ணம் கைநழுவிப்போயுள்ளது.

உலகக் கிண்ணத் தொடரின் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுக்களினால் வெற்றியீட்டி இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது.

உலகக் கிண்ணத் தொடரின் இரண்டாவது அயைிறுதி ஆட்டம் ஆர்ரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணிக்கும், இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணிக்கிடையிலும் பேர்மிங்கமில் ஆரம்பமானது.

போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற ஆஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாடி 49 ஓவர்களை எதிர்கொண்டு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 223 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

224 என்ற வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இங்கிலாந்து அணி 32.1 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 226 ஓட்டங்களைப் பெற்று ஆஸ்திரேலிய அணி நிர்ணயித்த வெற்றி இலக்கைக் கடந்தது.

இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி நான்காவது முறையாகவும் இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளதுடன், 1992ஆம் ஆண்டுக்கு பின்னர் ஒருநாள் உலகக் கிண்ண அரங்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி 27 வருடகால தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

அத்துடன் 1992 ஆம் ஆண்டுக்குப் பின்னர் உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்குள் இங்கிலாந்து அணி நுழைந்துள்ளதும் சிறப்பம்சம் ஆகும்.

இந்தநிலையில் எதிர்வரும் 14 ஆம் திகதி இடம்பெறவுள்ள நடப்பு உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப்போட்டியில் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து அணியுடன் இங்கிலாந்து அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளமையும் குறிப்பித்தக்கது.

இந்த இரு அணிகளும் இதுவரையில் உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றியது இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *