நம்பி வாக்களித்த மக்களுக்கு துரோகமிழைக்கும் மைத்திரி! – மாவை எம்.பி. கடும் கண்டனம்

“நம்பி வாக்களித்த மக்களுக்கு அரசியல் தவறுகளை இழைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன துரோகம் செய்து வருகின்றார். உண்மைக்கு மாறாக ஜனாதிபதி கூறும் கருத்துக்களைக் கண்டிக்கின்றேன்.”

– இவ்வாறு தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா.

தமிழீழ விடுதலைப்புலிகள் தொடர்பில் ஜனாதிபதி தெரிவித்த கருத்து தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தமிழீழ விடுதலைப்புலிகள் போதைப்பொருள் வியாபாரம் செய்து இன விடுதலைப் போராட்டம் நடத்தினார்கள் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டதை நாங்கள் மிக வன்மையாகக் கண்டிக்கின்றோம். அவ்வாறு அந்த இயக்கம் தொடர்பில் கருத்துச் சொல்வதற்கு எந்தவிதமான அடிப்படையோ அல்லது ஆதாரமோ இல்லாமல் அவர் ஒரு சபலப் புத்தியோடு அப்படியான வார்த்தைகளைப் பாவித்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நாட்டில் நடைபெற்ற பின்னர் இதே ஜனாதிபதிதான் விடுதலைப்புலிகள் ஒரு கொள்கைக்காகப் போராடினார்கள் என்றும், அதனால்தான் மக்கள் அவர்களை ஆதரித்தார்கள் என்றும் கூறியிருந்தார். ஆனால், அப்படி நினைத்து அதைச் சொன்னவர் இனப்பிரச்சினைத் தீர்வுக்காக ஒரு அடி கூட முன்னேறவிடவில்லை.

இனப்பிரச்சினைக்கான தீர்வு உள்ளிட்ட நாட்டிலுள்ள முக்கியமான பல பிரச்சினைகளுக்கான தீர்வுக்காக நாட்டிலுள்ள 68 இலட்சம் மக்கள் அவருக்கு ஆதரவாக வாக்களித்தனர். அந்த மக்களுக்கு ஜனாதிபதி பெரும் தூரோகம் செய்திருக்கின்றார். பிரச்சினைகளுக்குத் தீர்வைக் காணத் தடுத்து வருதுவடன் சகலதையும் குழப்பி வருகின்றார்.

தீவிரவாதத் தாக்குதலின் பின்னர் விடுதலைப் புலிகள் தொடர்பில் அப்படிக் கூறியவர் இப்போது போதைப்பொருள் தொடர்பில் புலிகள் பற்றிக் கூறியது ஏற்றுக்கொள்ளத்தக்க விடயமல்ல. அது மிகவும் கண்டத்துக்குரியது என்பதுடன் அவருடைய அந்தக் கருத்தை முற்று முழதாக நாங்கள் எதிர்க்கின்றோம்.

உண்மைக்கு மாறான அந்தக் கருத்தக்களை நாங்கள் எதிர்த்து நிற்கின்றோம். ஆகவே, ஜனாதிபதி உண்மைக்கு மாறான இவ்வாறான கருத்துக்களை வெளியிடாமல் இருப்பதே அவரின் பதவிக்கு ஒரு சிறப்பை ஏற்படுத்தும்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *