பிரதிப் பொலிஸ்மா அதிபர் தர்மசிறிக்கு 3 வருடச் சிறை! – மேன்முறையீட்டையடுத்துப் பிணை

ஊழல், மோசடிக் குற்றச்சாட்டில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஹெக்டர் தர்மசிறிக்கு கொழும்பு பிரதான நீதிவான் லங்கா ஜயரத்ன இன்று மூன்று வருடங்கள் சிறைத்தண்டனை விதித்தார். அத்துடன், குற்றவாளிக்கு 3 இலட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டது.

2007ஆம் ஆண்டு தனது தனிப்பட்ட நிர்மாணப்பணிகளுக்காக சிவில் பாதுகாப்பு அதிகாரிகள் சிலரை ஈடுபடுத்தியமை உள்ளிட்ட 15 குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அவற்றில் 6 குற்றச்சாட்டுகளில் ஹெக்டர் தர்மசிறி குற்றவாளி என நீதிமன்றம் இன்று தீர்மானித்தது.

ஏனைய 9 குற்றச்சாட்டுகளிலிருந்து பிரதிவாதியை நீதிவான் விடுவித்தார்.

6 குற்றச்சாட்டுகளுக்கும் தளர்த்தப்பட்ட சிறைத்தண்டனை விதித்த நீதிவான், சிறைத்தண்டனையை 3 வருடங்களாக அறிவித்தார்.

இதனிடையே, ஹெக்டர் தர்மசிறியின் சட்டத்தரணி, மேல் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்வதாக எழுத்து மூலம் இன்று மன்றுக்கு அறிவித்தார்.

அதனையடுத்து முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஹெக்டர் தர்மசிறிக்கு மூன்று இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணை வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *