மோடியின் பிறந்த நாளன்று நாமல் எம்.பிக்கு திருமணம்!

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவின் மூத்த புதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவுக்கு எதிர்வரும் செப்டெம்பர் 17ஆம் திகதி திருமணம் நடைபெறவுள்ளது.

மஹிந்த ராஜபக்சவுடன் இணைந்து கடந்த 9ஆம் திகதி கொழும்பில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தபோது, தனக்குத் திருமணம் நடைபெறவுள்ளமை குறித்து நாமல் ராஜபக்ச தகவல் வெளியிட்டுள்ளார்.

செப்டெம்பர் 17ஆம் திகதி தனக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது என நாமல் ராஜபக்ச கூறியதும், எதற்காக அந்த நாளை தெரிவு செய்தீர்கள் என்று இந்தியப் பிரதமர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதற்கு நாமல், சாதாரணமாக ஒரு நாளைத் தெரிவுசெய்ததாகக் குறிப்பிட்டார்.

அப்போது, இந்தியப் பிரதமர் மோடி, “ஏன் அவ்வாறு கேட்டேன் என்றால், அன்று தான், (செப்டெம்பர் 17) எனது பிறந்த நாள்” என்று மோடி பதிலளித்துள்ளார்.

நாமல் ராஜபக்சவை திருமணம் செய்து கொள்ளவுள்ள மணப்பெண், நன்கு அறியப்பட்ட விளையாட்டு ஆர்வலரும், லங்கா ஸ்போர்ட்ஸ் ரைசனின் (எல்.எஸ்.ஆர்.) நிறுவுநருமான திலக் வீரசிங்கவின் ஒரே மகள் ஆவார். இவரது, தாயார் அருணி விக்கிரமரத்ன, தேசிய அளவிலான ஓட்ட சாம்பியனாவார். இவர்கள் ஒன்பது விடுதிகளை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *