மார்க்கக் கல்வியைப் பறிக்கவே முடியாது! – கிழக்கு முன்னாள் முதல்வர் நஸீர் திட்டவட்டம்

“இலங்கையிலுள்ள அனைத்து மதங்களும் தத்தமது மதம் சார்ந்த கல்விகளைச் சிறுபிராயம் முதல் குழந்தைகளுக்கு வழங்கி வருகின்றன. அவ்வாறே முஸ்லிம்களின் மார்க்கக் கல்வியும் மத்ரஸாக்கள் மூலமாக வழங்கப்படுகின்றன. இந்தக் கல்விப் போதனைகள் அவர்களை நல்வழிப்படுத்தி நற்பிரஜைகளாக வாழ வழிகோலுகின்றன. இத்தயை நிலையில் முஸ்லிம்களது மார்க்கக் கல்வியைப் பறிக்கும் வகையில் மேற்கொள்ளப்படும் எந்த நடவடிக்கைக்கும் நாம் துணைபோக முடியாது. பிரதான எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன மத்ரஸாக்களை கல்வி அமைச்சின் கொண்டுவராமல் அவற்றைத் தடை செய்யுங்கள் எனக் கூறியிருப்பது அவரது அப்பட்டமான இனவிரோதக் கருத்தாகவே இருக்கின்றது.”

– இவ்வாறு கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“மத்ரஸாக்களை கல்வி அமைச்சு மற்றும் முஸ்லிம் கலாசார அமைச்சு ஆகியவற்றின் கீழ் கொண்டு வருவது தொடர்பாகப் பிரதமர் நடவடிக்கை எடுத்து வருகின்றார். இவ்விடயம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடந்த ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே பந்துல குணவர்த்தன இக்கருத்தை முன்வைத்துள்ளார்.

‘இஸ்லாமிய மற்றும் அரபுக் கற்கை நெறிகளை அடிப்படையாகக் கொண்ட மத்ரஸாக்கள் அனைத்தும் நாடு தழுவிய ரீதியில் சட்டவிரோதமான முறையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன’ எனத் தெரிவிக்கும் அவர், ‘இவற்றை கல்வி அமைச்சு, முஸ்லிம் கலாசார அமைச்சு ஆகியவற்றின் கீழ் கொண்டு வருவது எந்தவித மாற்றங்களையும் கொண்டுவராது. இது குறுகிய கால தீர்வாகவே அமையும். எனவே, இவற்றை தடைசெய்ய வேண்டும்’ எனத் தெரிவித்திருக்கின்றார்.

மதங்களுக்கிடையிலான ஐக்கியத்துக்கும் நல்லிணக்கத்துக்கும் நஞ்சை ஊட்டும் இவ்வாறான கருத்துகள் பெரும் ஆபத்தை ஏற்படுத்தும்.

அரசு மத்ரஸாக்களைப் பாரமெடுத்து அவற்றை உரிய முறையில் செயற்படச் செய்ய அவற்றுக்கான பொருளாதார மற்றும் பௌதீக வள உதவிகளை நல்குமாயின் நாம் அவற்றை வரவேற்கலாம். அதைவிடுத்து ஒரு மதத்தின் மார்க்கக் கல்வியைச் சீர்குலைக்கும் நோக்குடன் அவற்றைத் தடை செய்ய முயலுமானால் அவற்றுக்கு இடமளிக்க முடியாது.

ஒவ்வொரு மதமும் தமது மதக் கல்வியைப் பயிற்றுவிக்கவும் அதனூடாக மதபோதகர்களை உருவாக்கவும். உயர்தரக் கல்விகளை வழங்கி வருகின்றன. பௌத்த மதத்துக்குகென நம்நாட்டில் பல்கலைக்கழகங்கள், பிரிவினாக்கள் கூட இருக்கின்றன. அதுபோல் ஏனைய மதங்களும் தமது மதக்கல்விகளை மேற்கொள்ள உரிமைகள் உடையனவாக இருக்கின்றன.

இந்தநிலையில், அண்மையில் முஸ்லிம் மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒரு குழு மேற்கொண்ட காட்டுமிராண்டித்தனமான சம்பவத்தைத் தொடர்ந்து ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தையும் வேரறுக்கும் செயற்பாடுகள் முடுக்கி விடப்படுகின்றமை எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ளகூடிய ஒன்றல்ல. இந்த விடயத்தில் அரசியல்வாதிகள் தமது அரசியல் இலாபம் கருதி செயற்பட முனைவது கண்டனத்துக்குரிய ஒன்றாகும்.

எனவே, முஸ்லிம்களின் மார்க்கக்கல்வி விடயத்தில் அரசு அவதானமாக தமது நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்த விரும்புகின்றேன்” – என்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *