14 நாட்களுக்குள் விவாதம் இல்லையேல் நாடாளுமன்றம் மக்களினால் முற்றுகை! – விமல் எச்சரிக்கை

“அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை இன்னும் இரு வாரங்களுக்குள் விவாதத்துக்கு எடுக்க சபாநாயகர் நடவடிக்கை எடுக்காவிட்டால் நாடாளுமன்றம் மக்களால் முற்றுகையிடப்படும்.”

– இவ்வாறு சபையில் இன்று உரையாற்றும்போது எச்சரிக்கை விடுத்தார் பொது எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“தன்னைச் சிறந்த பௌத்தர் என்று கூறிக்கொள்ளும் சபாநாயகர் அமைச்சர் ரிஷாத் விடயத்தில் என்ன நடவடிக்கை எடுக்கின்றார் என்பதைப் பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.

அமைச்சர் ரிஷாத் குற்றச்சாட்டுக்களை ஆராய நாடாளுமன்றத் தெரிவுக்குழு ஒன்று நியமிக்கப்படவுள்ளதால் அந்தக் குழுவின் அறிக்கை சபைக்கு வரும் வரை அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை விவாதத்துக்கு எடுக்கவேண்டாம் என்று இன்று நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல கூறியுள்ளார். இது ஏற்றுக்கொள்ள முடியாதது.

எங்களுக்கு விரைவில் ஒரு திகதி கிடைக்காவிட்டால் மக்களைக் கொண்டு நாடாளுமன்றத்தை முற்றுகையிடுவோம்.

இங்கே உள்ள அமெரிக்கத் தூதுவர் இங்கு வர முன்னர் ரீயுனிசியா, சிரியாவில் பணி புரிந்தவர். ஒரு நாட்டில் குழப்பங்கள் இருந்தால்தான் அமெரிக்காவின் தலையீடு நடக்கும். அவர்கள் வர அதுவே வசதி. இப்போது விகாரைகளுக்குச் செல்லும் அமெரிக்கத் தூதுவர் தனது பணியை இங்கு செவ்வனே செய்ய ஆரம்பித்துள்ளார். இன்று ஆளுங்கட்சிக் கூட்டத்தில் அமைச்சர் ரிஷாத் – தான் பதவி இராஜிநாமா செய்தால் அரசு கவிழ்ந்து விடும் என அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் பேசியுள்ளார். அரசு ஏற்கனவே கவிழ்ந்து போய்த்தான் உள்ளது” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *