ஜனாதிபதித் தேர்தலில் நான் களமிறங்கி வெல்வது உறுதி! – இஸ்லாமியத் தீவிரவாதிகளைக் கூண்டோடு அழிப்பதே முதல் இலக்கு என்கிறார் கோட்டா

“எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நான் வேட்பாளராகக் களமிறங்குவது உறுதி. அதேவேளை, அந்தத் தேர்தலில் நான் வெற்றியடைவதும் உறுதி.”

– இவ்வாறு தெரிவித்துள்ளார் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலர் கோட்டாபய ராஜபக்ச.

“ஜனாதிபதியாகப் பதவியேற்றதும் இலங்கையில் வேரூன்றி இருக்கும் இஸ்லாமிய தீவிரவாதத்தைக் கூண்டோடு அழிப்பதே எனது முதல் இலக்கு” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சமகால அரசியல் நிலவரம் தொடர்பில் சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-

“இஸ்லாமியத் தீவிரவாதிகளின் தாக்குதலுடன் என்னையும் தொடர்புபடுத்தி ஐக்கிய தேசியக் கட்சியினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் விஷமத்தனமான பரப்புரைகளை மேற்கொள்கின்றனர். தங்கள் வாக்கு வங்கிக்காக அவர்கள் இந்தப் போலிப் பரப்புரைகளை முன்னெடுக்கின்றனர். உண்மையில் எனக்கும் இஸ்லாமியத் தீவிரவாதிகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதைக் குறிவைக்க விரும்புகின்றேன்.

இஸ்லாமியத் தீவிரவாதிகள் பலர் இலங்கையில் இன்னமும் மறைந்திருக்கின்றார்கள். பெரும் தாக்குதல்களுக்கு அவர்கள் திட்டம் தீட்டுகின்றார்கள் எனப் புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த அரசால் இஸ்லாமியத் தீவிரவாதிகளை இல்லாதொழிக்க முடியாது. ஏனெனில், அரசில் உள்ள முஸ்லிம் அமைச்சர்களும், முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இஸ்லாமியத் தீவிரவாதிகளுக்கு மறைமுகமாக உதவுகின்றார்கள். ஆனால், குறித்த அரசியல்வாதிகளுக்கு எதிராக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்தநிலையில், இஸ்லாமியத் தீவிரவாதிகளை இந்த அரசு எப்படி இல்லாதொழிக்கும்? ஜனாதிபதித் தேர்தலில் நான் வென்றதும் இஸ்லாமியத் தீவிரவாதிகளைக் கூண்டோடு அழிப்பதே எனது முதல் இலக்காக இருக்கின்றது” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *