ஐக்கிய அரபு அமீரக வரலாற்றில் முதல் முறையாக இந்து தந்தை, முஸ்லிம் தாய்க்கு பிறந்த குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ்

ஐக்கிய அரபு அமீரக வரலாற்றில் முதன்முறையாக இந்து தந்தைக்கும் முஸ்லிம் பெண்ணுக்கும் பிறந்த குழந்தைக்கு தற்போது பிறப்பு சான்றிதழ் கிடைத்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள திருமண சட்டத்தின்படி, ஒரு முஸ்லிம் ஆண் பிற மதத்தை சேர்ந்த பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள அனுமதி உண்டு. அதே சமயம், ஒரு முஸ்லிம் பெண் பிற மதங்களைச் சேர்ந்த ஆணைத் திருமணம் செய்துகொள்ள அனுமதி கிடையாது.

இந்நிலையில், இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்த இந்துவான கிரண் பாபு என்பவர், அதே மாநிலத்தை சேர்ந்த சனம் சாபூ சித்திக் என்ற முஸ்லிம் பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

பின்னர் அவர்கள் இருவரும் கடந்த 2016-ம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் குடியேறினர். கடந்த ஆண்டு ஜூலை மாதம் இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது.

ஆனால், முஸ்லிம் தாய்க்கு பிறந்த அந்த குழந்தையின் தந்தை இந்து என்பதால் அந்த குழந்தைக்கு பிறப்புச் சான்றிதழ் மறுக்கப்பட்டது.

இந்த நிலையில், 2019-ம் ஆண்டை சகிப்புத்தன்மை ஆண்டாக ஐக்கிய அரபு அமீரகம் கடைபிடிக்கிறது. இதனை அடிப்படையாக கொண்டு, கிரண் பாபு மீண்டும் தனது குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தார்.

இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, ஐக்கிய அரபு அமீரக வரலாற்றில் முதன்முறையாக இந்து தந்தைக்கும் முஸ்லிம் பெண்ணுக்கும் பிறந்த குழந்தைக்கு தற்போது பிறப்பு சான்றிதழ் கிடைத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *