சாய்ந்தமருதில் சஹ்ரானின் மனைவியும் மகளும் காயங்களுடன் கைது! – உறுதிப்படுத்தியது பொலிஸ்

இலங்கையில் இடம்பெற்ற தொடர் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹாசீமின் மனைவி மற்றும் மகள் காயங்களுடன் கைதுசெய்யப்பட்டு வைத்தியசாலையில் கடும் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

“கடந்த 26ஆம் திகதி மாலை விசேட அதிரடி படையினர் மற்றும் பொலிஸ் அதிகாரிகளால் கல்முனை – சாய்ந்தமருதுப் பிரதேசத்தில் சுற்றிவளைப்புத் தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

அங்கு வீடொன்றிலிருந்து துப்பாக்கிச் சூடு மற்றும் குண்டுவெடிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து 27ஆம் திகதி காலை பாதுகாப்புப் படையினரால் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

குறித்த வீட்டைச் சோதனையிடும்போது அந்த வீட்டில் இருந்து 6 ஆண்கள், 3 பெண்கள், 6 சிறுவர்கள் என பேரின் 15 சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து அந்த வீடடில் இருந்து காயங்களுக்குள்ளாக்கப்பட்ட 4 வயதுடைய சிறுமி மற்றும் பெண்ணொருவர் இராணுவத்தினரால் கல்முனை வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்டனர்.

குண்டு வெடிப்பால் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட 4 வயதுடைய சிறுமியான மொஹமட் சஹ்ரான் றுசைனா என்பர் தற்கொலைதாரி சஹ்ரானின் மகள் எனவும், காயமடைந்த பெண்ணான அப்துல் காதர் பாத்திமா சாதியா என்பர் அவரின் மனைவி எனவும் விசாரணைகளின்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அப்துல் காதர் பாத்திமா சாதியா என்பவர் பொலிஸாரால் தேடப்பட்ட பெண்களில் ஒருவராவார்.

தடை செய்யப்பட்டுள்ள தேசிய தௌஹீத் ஜமா அத் அமைப்பின் தலைவரான சஹ்ரான் ஹாசீம் கொழும்பு, ஷங்கிரி – லா ஹோட்டலில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்தி உயிரிழந்துள்ளார்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *