‘பெண் செயற்பாட்டாளர் தீவிரவாதி’ – வெளியான புகைப்படத்தால் சர்ச்சை

இலங்கை தற்கொலை குண்டுத் தாக்குதல் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் தேடப்படும் 6 சந்தேகநபர்களின் புகைப்படங்களை பொலிஸார்   வியாழக்கிழமை வெளியிட்டிருந்தனர்.

இவ்வாறு வெளியிடப்பட்ட புகைப்படங்களில் மூன்று ஆண்களும், மூன்று பெண்களும் அடங்கும்.

இலங்கை பொலிஸார் இந்த புகைப்படங்களை வெளியிட்டு சிறிது நேரத்தில் மற்றுமொரு தகவலை வெளியிட்டிருந்தனர்.

தாம் அனுப்பிய ஒரு பெண்ணின் புகைப்படம் மாறுப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அப்துல் காதர் பாதீமா காதீயா என்ற பெண்ணுடையது என தெரிவித்து, அனுப்பி வைக்கப்பட்ட புகைப்படம், அவருடையது அல்லவென அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வாறாயின், பொலிஸாரினால் அனுப்பி

வைக்கப்பட்ட புகைப்படத்தில் இருப்பது யார்?

இந்த புகைப்படத்திலுள்ள பெண் எனக் கூறிக் கொள்ளும் அமாரா மஜீத் என்ற பெண் தனது பேஸ்புக் கணக்கில் குறித்த விடயம் தொடர்பில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிற்றுகிழமை இலங்கையில் நடத்தப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத தாக்குதலக்கு தன்னை இலங்கை அரசாங்கம் தவறாக பெயரிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இது முழுமையாக தவறான ஒரு அடையாளப்படுத்தும் நடவடிக்கை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இவ்வாறான தவறான குற்றச்சாட்டு முன்வைப்பதனை தவிர்க்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இனிவரும் காலங்களில் இவ்வாறான தகவல் பரிமாற்றங்களை செய்யும் போது, மிகவும் அவதானத்துடன் செய்யுமாறும் அவர் தனது பேஸ்புக் கணக்கில் ஊடாக கேட்டுக்கொண்டுள்ளார்.

யார் இந்த அமாரா மஜீத்?

அமாரா மஜீத், பெண்களை சிறப்பிக்கும் பிபிசியின் 100 Women தொடரில் 2015ஆம் ஆண்டு இடம் பெற்றிருந்தார்.

அமெரிக்காவின் பால்டிமோர் நகரத்தில் பிறந்த மஜீதின் பெற்றோர் இலங்கையை சேர்ந்தவர்கள் ஆவர்.

இவர் இஸ்லாமியர்கள் பொதுவாக சித்தரிக்கப்படுவதை எதிர்த்து The Foreigners என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.

மேலும், தனது 16 வயதில் The Hijab Project என்ற திட்டத்தினை இவர் தொடங்கினார். அதாவது, பெண்கள் ஒரு நாளைக்கு ஹிஜாப் அணிந்து அதன் அனுபவத்தை பற்றி சமூக ஊடகங்களில் எழுதுவதுதான் இத்திட்டம்.

இஸ்லாமியர்கள் மீது உள்ள தவறான பார்வையை மாற்றுவதே இவரது நோக்கம்.

புகைப்படம் தவறியமைக்கான காரணம்?

குற்றப் புலனாய்வு பிரிவினராலேயே இந்த புகைப்படம் அனுப்பி வைக்கப்பட்ட பின்னணியிலேயே, தாம் அதனை ஊடகங்களுக்கு வெளியிட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் போலீஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளார்.

எனினும், சிறிது நேரத்தின் பின்னர் தாம் அனுப்பிய புகைப்படத்தில் உள்ள பெண், அப்துல் காதர் பாதீமா காதீயா கிடையாது என தனக்கு அறிவிக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்நிலையில், இதற்காக இலங்கை பொலிஸார்  மன்னிப்பு கோரியுள்ளனர்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *