“உமது கருத்து ஐ.எஸ்.ஐ.எஸ். அறிவிப்பு!” – சர்வகட்சி மாநாட்டில் அதாவுல்லா மீது சீறிப் பாய்ந்தார் ரணில்

நாட்டில் தொடர் வெடிகுண்டுத் தாக்குதல்களையடுத்து தற்போதைய நிலைமை மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் சர்வகட்சி மாநாடு இன்று நடைபெற்றது. இதன்போது கட்சித் தலைவர்களுக்கிடையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றது.

வாக்குவாதம் சூடுபிடித்து ஒரு கட்டத்தில், “உமது கருத்து ஐ.எஸ்.ஐ.எஸ். அறிவிப்பு” என்று தேசிய காங்கிரஸின் தலைவர் அதாவுல்லா மீது கடும் கோபத்துடன் சீறிப் பாய்ந்தார் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.

“அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு இலங்கை ஜனாதிபதி யார் என்பது தெரியாதா? நாட்டுத் தலைவர் மைத்திரிபாலதானே? ஆனால், அவர் பிரதமர் ரணிலுடன் தொலைபேசியில் பேசியிருக்கின்றார். இதனை நான் கண்டிக்கிறேன். பிரதமர் ரணிலும் தன்னுடன் பேசாமல் மைத்திரியுடன் பேசுமாறு சொல்லியிருக்க வேண்டும். நாட்டுத் தலைவர் ஒருவரை நீங்கள் அவமதித்துள்ளீர்கள்…” என்று பிரதமர் ரணில் மீது கடும் விமர்சனத்தை வெளியிட்டார் அதாவுல்லா.

“சரி அவர்தான் அப்படிச் செய்தார்… ஆனால், நீங்கள் என்ன செய்திருக்க வேண்டும்? நாட்டின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிதான். அதனைத் தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள்…” என்றும் ரணிலைச் சாடிய அதாவுல்லா, அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் ரணிலிடம் தொலைபேசியில் பேசியதைக் கடுமையாக விமர்சித்தார்.

இதற்குப் பதிலளித்த பிரதமர் ரணில், “உமது கருத்து ஒரு ஐ.எஸ்.ஐ.எஸ். அறிவிப்பு…” என்று கோபத்துடன் பதிலடி கொடுத்தார்.

இங்கு பேசிய தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரான அமைச்சர் மனோ கணேசன், “ஓர் அமைச்சராக இருப்பதற்கே வெட்கப்படும் நிலைமை எமக்கு ஏற்பட்டுள்ளது. இதன் பொறுப்பை ஆளுக்காள் சுமத்திக்கொண்டிருக்காமல் உண்மையை உரிய தரப்பினர் ஏற்கவேண்டும்” என்று குறிப்பிட்டார்.

ஜனாதிபதியும் பிரதமரும் தொடர் வெடிகுண்டுத் தாக்குதல் சம்பவங்களுக்குப் பொறுப்பேற்க வேண்டும் என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான விமல் வீரவன்ச எம்.பி. இங்கு தெரிவித்தார்.

இதன்போது, வெடிகுண்டுத் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் எந்த முன்னெச்சரிக்கைகளும் பாதுகாப்புத் தரப்பால் தனக்கு வழங்கப்படவில்லை என்று ஜனாதிபதி மைத்திரி கூறினார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *