ஐ.தே.கவை உடைக்கும் சதி முயற்சி பலிக்காது! – எமது குடும்பச் சண்டைக்குள் மற்றவர்கள் மூக்கை நுழைப்பதா? – ரணில் ஆவேசம்

“ஐக்கிய தேசியக் கட்சி ஒரு பலமான கட்சி. இதில் உள்ளவர்கள் அனைவரும் குடும்பத்தைப் போன்று ஒற்றுமையாக வாழ்கின்றோம். இதற்குள் கருத்து முரண்பாடுகள் – சண்டைகள் வருவது வழமை. இதை நாமே பேசித் தீர்ப்போம். இதற்குள் வேறு எவரும் மூக்கை நுழைக்க முடியாது. ‘2018 அரசியல் சூழ்ச்சிக்காரர்கள்’ எமது கட்சியை உடைக்க எடுக்கும் சதி முயற்சி ஒருபோதும் பலிக்காது.”

– இவ்வாறு திட்டவட்டமாகத் தெரிவித்தார் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க.

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் உப தலைவர் ரவி கருணாநாயக்க ஆகியோருக்கிடையில் சித்திரைப் புத்தாண்டு பிறந்தவுடன் கடும் சொற்போர் மூண்டது. இருவரும் பொது வெளியில் பகிரங்கமாகவே சரமாரியாக விமர்சனக்கணைகளைத் தொடுத்து வந்தனர். இதையடுத்து பொது வெளியில் கருத்து மோதலில் ஈடுபடுவதை உடன் நிறுத்துமாறு இருவருக்கும் கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் பணிப்புரை விடுத்திருந்தார். இந்தநிலையில், ‘ஐக்கிய தேசியக் கட்சிக்குள் கட்சித் தாவல் தொடர்பில் ஒரு சூழ்ச்சி இடம்பெறுவதாக அறியமுடிகின்றது. அது அவர்களுக்குள் ஏற்பட்ட சூழ்ச்சி. எனினும், அது வெளியாகிய நிலையில் அந்த விடயம் கைவிடப்பட்டுள்ளது’ என்று நுவரெலியாவில் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை ஊடகவியலாளர்களிடம் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் பிரதமர் ரணிலிடம் ஊடகம் ஒன்று வினவியபோதே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“அரசியல் சூழ்ச்சி ஊடாக ஆட்சியைப் பிடிக்க முயன்று மூக்குடைபட்டவர்கள் இப்போது எமது கட்சியை (ஐக்கிய தேசியக் கட்சி) உடைத்து ஆட்சியைப் பிடிக்க முயல்கிறார்கள். அவர்களின் பகல் கனவு ஒருபோதும் பலிக்காது. அவர்கள், சின்னாபின்னமாகியுள்ள தமது கட்சிகளை கட்டிக்காக்கும் வழியைப் பார்க்க வேண்டும். நாம் எந்தத் தேர்தலையும் ஓரணியில் நின்று சந்திக்கத் தயாராக இருக்கின்றோம். ஒவ்வொரு தேர்தல்களுக்கும் எமது வெற்றி வேட்பாளர்கள் தயார் நிலையில் உள்ளனர்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *