சஜித்தை பிரதமராக்க மங்கள சதித் திட்டமா? – அவரே அடியோடு நிராகரிப்பு

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரான சஜித் பிரேமதாசவை பிரதமராக்குவதற்குத் தான் சூழ்ச்சித் திட்டம் வகுத்ததாக வெளியாகியுள்ள தகவல்களை நிதி அமைச்சர் மங்கள சமரவீர இன்று (20) அடியோடு நிராகரித்தார்.

அமைச்சர் சஜித் பிரேமதாசவை பிரதமராக்குவதற்கான அரசியல் நகர்வுகள் திரைமறைவில் முன்னெடுக்கப்படுகின்றன எனவும், இதன் பின்னணியில் நிதி அமைச்சர் மங்கள சமரவீர பிரதான சூத்திரதாரியாக செயற்படுகின்றார் எனவும் தகவல்கள் கசிந்தன.

இது தொடர்பில் கடந்த 12ஆம் திகதி கொழும்பிலுள்ள நட்சத்திர ஹோட்டலொன்றில் மங்கள சமரவீர தலைமையில் இரகசிய சந்திப்பொன்று நடைபெற்றது எனவும் வெளியான தகவலானது சமூகவலைத்தளங்களில் தீயாகப் பரவியது. அது குறித்து பலகோணங்களில் கருத்துகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில் இவ்விகாரம் குறித்து நிதி அமைச்சர் மங்கள சமரவீரவிடம் ஊடகவியலாளர்கள் இன்று மாத்தறையில் வைத்து கேள்விகளை எழுப்பினர். இவற்றுக்குப் பதிலளித்த அவர்,

“ஆட்சி மாற்றத்துக்கான எந்தவொரு சூழ்ச்சியையும் நான் செய்யவில்லை. எவரும் செய்வதற்கு இடமளிக்கப்போவதும் இல்லை. கடந்த 12ஆம் திகதி நான் நாட்டில் இருக்கவில்லை. எனவே, அந்தத் தகவல் போலியானது.

இன்று ஜனாதிபதித் தேர்தல் குறித்தே திரும்பும் திசையெல்லாம் பேசப்படுகின்றது. அந்தத் தேர்தலை எதிர்கொள்வதற்கு எமது கட்சி தயார் நிலையில் இருக்கின்றது. இம்முறை ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்தே ஜனாதிபதி வேட்பாளர் களமிறங்குவார்.

ஜனாதிபதித் தேர்தலில் வரலாற்று வெற்றியை ஐக்கிய தேசியக் கட்சி இம்முறை பதிவு செய்யும். அதன்பிறகு மேலும் பல ஆண்டுகளுக்கு எமது ஆட்சியே தொடரும். சஜித் மட்டுமல்ல ஆளுங்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் என்னுடன் தொடர்பிலேயே உள்ளனர்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *