தமிழகத்தில் இன்று வாக்களிப்பு; வேலூரில் மட்டும் தேர்தல் இரத்து!

பண விநியோக முறைப்பாட்டைத் தொடர்ந்து தமிழகத்தின் வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் தேர்தல் இரத்துச் செய்யப்பட்டது. அதேநேரம் வேலூர் மாவட்டத்தில் காலியாக இருந்த ஆம்பூர், குடியாத்தம் சட்டசபை தொகுதிகளில் திட்டமிட்டபடி இன்று வாக்குப் பதிவு நடைபெறுகின்றது.

தமிழ்நாட்டில் 39 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு இன்று (18 ஆம் திகதி) ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என அறிவிப்பு வெளியாகி இருந்தது.

இந்தத் தேர்தலில் வாக்குக்காகப் பெருமளவு பண விநியோகம் இருக்கும் எனத் தகவல்கள் வெளியாகியமையால் பறக்கும் படைகள் அமைத்துத் தேர்தல் ஆணையம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தது. வருமான வரித்துறை அதிகாரிகளும் தீவிர கண்காணிப்பில் இருந்து வந்தனர்.

இந்தநிலையில், தி.மு.க. பொருளாளரும் முன்னாள் அமைச்சருமான துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடும் வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது என இரகசியத் தகவல்கள் கிடைத்ததின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் அதிரடி
நடவடிக்கையில் இறங்கியது.

கடந்த மாதம் 27ஆம் திகதி இரவு வேலூர் மாவட்டம், காட்பாடியில் உள்ள துரை முருகன் இல்லம், அவரது மகன் கதிர் ஆனந்த் நடத்தும் பொறியியல் கல்லூரி, பள்ளிக்கூடத்தில் வருமான வரி அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இதில் ரூ.10 இலட்சம் ரொக்கப் பணமும், ஆவணங்களும் சிக்கின எனப் பரபரப்புத் தகவல்கள் வெளியாகின.

தொடர்ந்து துரை முருகனுக்கு மிகவும் நெருக்கமானவர்களின் இல்லங்களில் பணம் பதுக்கப்பட்டுள்ளதாகத் தகவல் அறிந்து, மறுபடியும் வருமான வரி அதிகாரிகள் கடந்த முதலாம் திகதி சோதனைகள் நடத்தினர்.

அந்தச் சோதனைகளில் கட்டுக்கட்டாக ரூ.10 கோடிக்கும் அதிகமான பணத் தொகை சிக்கியதாகத் தகவல்கள் வெளியாகின.

இந்தத் தொகை, வாக்காளர்களுக்கு விநியோகம் செய்வதற்காக வைக்கப்பட்டிருந்ததற்கு ஆதாரங்கள் சிக்கின  னவும் தெரிகின்றது.

மேலும் கதிர் ஆனந்த், அவருக்கு நெருக்கமான பூஞ்சோலை சீனிவாசன், தாமோதரன் ஆகியோர் மீது பொலிஸார் வழக்குப் பதிவு செய்தனர். இது தொடர்பாக தேர்தல் ஆணையகத்துக்குத் தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் சிறப்பு செலவின பார்வையாளர் ஆகியோர் அறிக்கை அளித்தனர்.

அந்த அறிக்கையை தேர்தல் ஆணையம் தீவிரமாகப் பரிசீலித்தது. அதன் முடிவில் வேலூர் தொகுதியில் தேர்தலை இரத்துச் செய்வது என முடிவு எடுக்கப்பட்டது.

இதற்கான பரிந்துரை அறிக்கையை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு தேர்தல் ஆணயம் கடந்த திங்கட்கிழமை இரவு முறைப்படி அனுப்பிவைத்தது. அதை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஏற்றுக்கொண்டார்.

இதையடுத்து வேலூர் தொகுதியில் தேர்தலை இரத்துச் செய்வதற்கு அவர் ஒப்புதல் அளித்தார். பிரசாரம் முடிந்த நிலையில், அந்தத் தொகுதியின் தேர்தல் அதிரடியாக இரத்துச் செய்யப்பட்டது.

இந்தியாவில் உள்ள 543 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு ஏழு கட்ட தேர்தல் அறிவிக்கப்பட்டதில், ஒரு தொகுதிக்கு தேர்தல் இரத்துச் செய்யப்படுவது இதுவே முதல் முறை.

அதே நேரத்தில் வேலூர் மாவட்டத்தில் காலியாக இருந்த ஆம்பூர், குடியாத்தம் சட்ட சபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் திட்டமிட்டபடி இன்று நடைபெறுகின்றது எனத் தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதசாகு தெரிவித்தார். அங்கு பலத்த பாதுகாப்புடன் வாக்குப் பதிவுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *