சமூகத்தைப் புது வழியில் பயணிக்கச் செய்வோம்!! – புத்தாண்டு வாழ்த்தில் ரணில் அறைகூவல்

“இயற்கையின் புது வசந்தம் மூலம் அழகு பெறும் சித்திரை மாதத்தில் கொண்டாடப்படும் தமிழ் – சிங்களப் புத்தாண்டு இன, மத பேதமின்றி இலங்கையர் அனைவரும் தமது வாழ்வைப் புதுப்பித்துக் கொள்ளவும் அதனூடாகச் சமூகத்தைப் புதிய வழியில் பயணிக்கச் செய்வதற்கும் கிடைக்கும் அருமையான சந்தர்ப்பமாகும்.”

– இவ்வாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விடுத்துள்ள தமிழ் – சிங்களப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“புத்தாண்டை மையப்படுத்திய எண்ணக்கருக்கள், சடங்கு சம்பிரதாயங்கள் அனைத்தும் இயற்கை மற்றும் மனிதனுக்கிடையிலான உறவைப் புதுப்பித்துக் கொள்வதுடன் மனித சமூகத்தில் அன்பு, கண்ணியம், சகோதரத்துவம், ஒற்றுமை போன்ற மானிடப் பெறுமானங்களைக் கட்டியெழுப்புவதை நோக்கமாகக் கொண்டு உருவாகியுள்ளன.

வடக்கு, தெற்கு என்ற பேதமின்றி ஒட்டுமொத்த இலங்கைச் சமூகத்தினரும் ஒன்றிணைந்து கொண்டாடும் புத்தாண்டு எமது வாழ்வினதும், சமூகத்தினதும் மறுமலர்ச்சிக்கான தேசிய கலாசாரத் திருவிழாவாகும்.

புத்தாண்டுச் சம்பிரதாயங்களின் உண்மையான அர்த்தங்களைப் புரிந்துகொண்டு மானிடத்தை மேம்படுத்துவதற்கான வாழ்வின் உண்மையான மகிழ்ச்சியை அனுபவிப்பதற்கான அபிலாஷையுடன் அவற்றைப் பின்பற்றுவது முக்கியமானதாகும். இலங்கைவாழ் உங்கள் அனைவருக்கும் அமைதி, மகிழ்ச்சி, செழுமை மிகுந்த இனிய புத்தாண்டாக அமையட்டும் என உளப்பூர்வமாக வாழ்த்துகிறேன்” – என்றுள்ளது.

பிரதமர் ரணிலின் ஆடம்பரமற்ற புத்தாண்டுக் கொண்டாட்டம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *