மஹிந்தவோ, கோட்டாவோ ஜனாதிபதியாகவே முடியாது! – துமிந்த திட்டவட்டம்

“எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவோ அல்லது முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவோ நடைமுறையிலுள்ள சட்டத்துக்கமைய இந்த நாட்டின் ஜனாதிபதியாக வரமுடியாது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே மீண்டும் களமிறங்குவார்.”

– இவ்வாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது:-

“ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, பொதுஜன பெரமுன உள்ளிட்ட பல கட்சிகளுடன் இணைந்து பெரும் கூட்டமைப்பாக எதிர்வரும் தேர்தலில் களமிறங்கும் நாம் சட்டத்துக்குக் கட்டுப்படும் பிரஜைகள்.

சட்டம் அனைவருக்கும் பொதுவானது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க இரட்டைப் பிரஜாவுரிமை வைத்திருந்த குற்றச்சாட்டின் காரணமாக தனது நாடாளுமன்ற ஆசனத்தை இழந்தார். இதே சட்டம்தான் கோட்டாபய ராஜபக்சவுக்கும் உள்ளது. சட்டம் அனைவருக்கும் பொதுவாக நடைமுறைப்படுத்தப்படும்.

அத்துடன் சிறைச்சாலைக்குள் இடம்பெறுவதாகக் குறிப்பிடப்படும் சட்டவிரோதச் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும். போதைப்பொருள் கடத்தல் மாபியாவை கட்டுப்படுத்த ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் உச்சக்கட்ட செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மீண்டும் நாட்டுத் தலைவரைத் தீர்மானிக்கும்போது நாட்டு மக்கள் ஒன்றுக்கு இரண்டு தடவைகள் சிந்தித்துச் செயற்படவேண்டும்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *