கூட்டமைப்பின் ஆதரவுடன் ‘பட்ஜட்’ நிறைவேற்றப்படும்! – முடிந்தால் தோற்கடியுங்கள் என மஹிந்த அணிக்கு ரணில் அரசு சவால்

“ஐக்கிய தேசிய முன்னணி அரசை எவராலும் வீழ்த்தவே முடியாது. எம்மை வீழ்த்த வகுக்கப்படும் சதி முயற்சிகள் ஒருபோதும் வெற்றியளிக்கா. வரவு – செலவுத் திட்டத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஆதரவு தரும். இயலுமானால் வரவு – செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பைத் தோற்கடியுங்கள் என்று நாம் மஹிந்த அணியினருக்குப் பகிரங்கமாகச் சவால் விடுகின்றோம்.”

– இவ்வாறு ஐக்கிய தேசிய முன்னணி தெரிவித்துள்ளது.

‘வரவு – செலவுத் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தி என்ற பெயரில் பல கோடி ரூபாவைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சலுகையாகக் கொடுத்து அவர்களைத் தம் பக்கம் வளைத்து விட்டார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க. ஆனாலும் எதிர்வரும் 5ஆம் திகதி வரவு – செலவுத் திட்டத்தை நாம் தோற்கடித்தே தீருவோம்’ என்று மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான தினேஷ் குணவர்தன, விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார, உதய கம்மன்பில ஆகியோர் ஊடகம் ஒன்றிடம் கூட்டாகத் தெரிவித்திருந்தனர்.

அது தொடர்பாக குறித்த ஊடகத்திடம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர்களான சஜித் பிரேமதாச, ராஜித சேனாரத்ன, ரவி கருணாநாயக்க ஆகியோர் கூட்டாகக் கருத்துத் தெரிவித்தபோதே மேற்கண்டவாறு கூறியுள்ளனர்.

அவர்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது:-

“சபையில் ஆளும் கட்சி உறுப்பினர்கள் இல்லாதபோது நடைபெற்ற குழு நிலை விவாத வாக்கெடுப்பில் சம்பிக்க ரணவக்க, வஜிர அபேவர்த்தன ஆகியோரிடம் உள்ள அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடுகளைத் தோற்கடித்த மமதையில் மஹிந்த அணி உள்ளது. வரவு – செலவுத் திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பைத் தோற்கடிப்போம் என்றும், அரசைக் கவிப்போம் என்றும் மஹிந்த அணி சூளுரைக்கின்றது.

அவர்களின் சூளுரைகள் அனைத்தும் வெறும் வாய்ப்பேச்சுகளே. செயல் வடிவில் நிறைவேற நாம் ஒருபோதும் அனுமதிக்கோம். எம்மை எவராலும் வீழ்த்த முடியாது.

நாட்டு மக்கள் என்றைக்கும் எமது பக்கமே இருப்பார்கள். மீண்டும் சர்வாதிகார ஆட்சி அமைய எமது மக்கள் விரும்ப மாட்டார்கள்.

கடந்த ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதியில் இருந்து எமது அரசை வீழ்த்த மஹிந்த அணி பல சதித் திட்டங்களைத் தீட்டுகின்றனர். அதை நாம் ஓரணியில் நின்று முறியடித்து வருகின்றோம். எம்மை வீழ்த்தும் சதி முயற்சிகள் ஒருபோதும் வெற்றியளிக்காது என்பதை மஹிந்த அணிக்கு நாம் தெளிவுபடுத்துகின்றோம்.

இயலுமானால் எதிர்வரும் 5ஆம் திகதி நடைபெறவுள்ள 2019ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பைத் (இறுதி வாக்கெடுப்பு) தோற்கடித்துக் காட்டுங்கள் என்று மஹிந்த அணியினரிடம் நாம் பகிரங்கமாகவே சவால் விடுகின்றோம்.

கூட்டமைப்பு ஆதரவு

வரவு – செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 14 பேரும் ஆதரவாக வாக்களிப்பார். கூட்டமைப்பின் தலைமை இது தொடர்பாக எம்மிடம் உறுதியளித்துள்ளது” – என்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *