சுவரில் விரல் வைத்தால்கூட இடிந்துவிழும் நிலையிலேயே மலையகத்தில் புதிய வீடுகள்!

” மலையக வீட்டுத்திட்டம் உரிய நெறிமுறைகளுக்கமைய முன்னெடுக்கப்படவில்லை.  சுவரில் விரல் வைத்தால்கூட இடிந்துவிழும் நிலையிலேயே அவற்றின் தரம்  காணப்படுகின்றது . வீடொன்றுக்கு தலா ஒரு இலட்சம் வீதம் கொமிஷன் கோரப்படுகின்றது.”

இவ்வாறு ஐக்கிய தேசியக்கட்சியின் இரத்தினபுரி  மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே சுட்டிக்காட்டினார்.

நாடாளுமன்றத்தில் தற்போது (03) நடைபெற்றுவரும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு, மலையக புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சு ஆகிய அமைச்சுகள் தொடர்பான  குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதை சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு,

” இறக்குவானை தேர்தல் தொகுதியிலுள்ள மாதம்பை தோட்டத்தில், இந்திய அரசின் நிதியுதவியின்கீழ் வீடுகள் கட்டப்பட்டன. ஒரு வீட்டுக்கு தலா 10 இலட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளது என கூறப்படுகின்றது.

விலைமனுகோரல்மூலம்  ஒப்பந்தக்காரர்கள் தெரிவுசெய்யப்படவில்லை. தங்களுக்கு யார் நெருக்கமோ அவர்களிடமே பொறுப்பு கையளிக்கப்பட்டுள்ளது.

அமைக்கப்பட்டுள்ள வீடுகளை கண்காணித்தேன். உரிய வகையில் அவை நிர்மாணிக்கப்படவில்லை. தரம் குறைந்தவையாகவே இருக்கின்றன. அதுமட்டுமல்ல அப்பாவி மக்களிடம் கொமிஷ் அடிக்கப்படுகின்றது. இதற்கு அதிகாரிகளும் துணைபோகின்றார்கள்.

வீடமைப்பு திறப்பு விழாவுக்கு வரவேண்டாம் என அமைச்சர் திகாம்பரத்திடம் கோரினேன். எனவே, இவை குறித்து விசாரணை நடத்தப்படவேண்டும். ரூ. 10 இலட்சம் ரூபாவுக்கு உரிய தரத்துடன் வீடுகளை நிர்மாணிக்கலாம்.” என்றார்.

அதேவேளை, வீட்டுத் திட்டம் குறித்து கருத்து வெளியிட்ட ரோஹினி குமாரி விஜேரத்ன,

” நல்லாட்சியை ஏற்படுத்துவதற்கு நுவரெலிய மாவட்ட  மக்கள் மட்டுமல்ல, மாத்தளை, கண்டி ஆகிய மாவட்டங்களில் வாழும் மக்களும் ஒத்துழைப்பு வழங்கினர்.

மாத்தளை மாவட்டத்திலுள்ள, பம்பரக தோட்டத்தில் நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் தரம் குறைவாகவே இருக்கின்றது.திருப்திபடுமளவுக்கு இல்லை.

அமைச்சர் சஜித் பிரேமதாசவின் அமைச்சின்கீழ் சிறப்பாக வீடுகள் அமைக்கப்படுகின்றன.” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *