‘கோட்டா’ ஆயுதத்தை கையிலேந்தி வேட்டைக்கு தயாராகும் மஹிந்த!

மாகாணசபைத் தேர்தலுக்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுவதற்கான அறிகுறிகள் அரசியல் களத்தில் பிரகாசமாக தென்படுவதால் அது குறித்து பிரதான அரசியல் கட்சிகள் முன்கூட்டியே கழுகுப்பார்வையை செலுத்தியுள்ளன.

கூட்டணி அமைத்தல்,  கீழ்மட்ட அரசியல் இயந்திரத்தைப் பலப்படுத்தல், பிரபலங்களை வளைத்துப்போடுதல் என வெளிப்படையாகவும், திரைமறைவிலும் காய்நகர்த்தல்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

இலங்கை அரசியல் களத்தை பொறுத்தமட்டில் ஜனாதிபதித் தேர்தலின்போது இருமுனைப்போட்டியே நிலவும். இம்முறையும் அதில்  மாற்றம் வராது என்றே நம்பப்படுகின்றது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் மஹிந்தவின் ஆசியுடன் கோட்டாபய ராஜபக்சவே போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சிங்கள், பௌத்த வாக்குகளை முழுமையாக வேட்டையாடுவார் என அதீத நம்பிக்கையுடனேயே கோட்டா களமிறக்கப்படுகின்றார்.

எனினும், கோட்டாவின் பெயர் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்படும் பட்சத்தில், மஹிந்த, மைத்திரி  கூட்டணிக்குள் மோதல் வெடிக்கலாம். சிலர் கூட்டணியிலிருந்து வெளியேறக்கூடும்.

குறிப்பாக ஐக்கிய தேசியக்கட்சியின் சார்பில் ரணில் விக்கிரமசிங்க அல்லாது பிரிதொரு வேட்பாளர் களமிறங்கும்பட்சத்தில் அவருக்கு நேசக்கரம் நீட்டுவதற்கு மைத்திரி தரப்பிலுள்ள சிலர் தயாராகவே இருக்கின்றனர்.

எனவேதான், ஜனாதிபதி வேட்பாளரை வெளிப்படையாக அறிவிக்காமல் மஹிந்த மௌனம் காத்துவருகின்றார். அதிருப்தி நிலையில் இருப்பவர்களை இனங்கண்டு அவர்களை திருப்திப்படுத்திய பின்னரே, உரிய நேரத்தில், உரிய வகையில் ஜனாதிபதி வேட்பாளர் குறித்த அறிவிப்பை மஹிந்த விடுப்பார் என அறியமுடிகின்றது.

அதேவேளை, வெளிநாடுகளையும் பகைத்துக்கொள்ளாமல் அவற்றின் ஆதரவையும் திரட்டும் முயற்சியில் மஹிந்த இறங்கியுள்ளார். இறுதிநேரத்தில்கூட சர்வதேசம் காலைவாரக்கூடும் என்பதாலேயே வலிந்துசென்று வெளிநாட்டு தூதுவர்களையும், இராஜதந்திரிகளையும் மஹிந்த தரப்பு சந்தித்து கலந்துரையாடுவதாக கொழும்பு அரசியலில் கிசுகிசுக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *