மஹிந்தவின் ‘ஒப்பரேஷன் -02’ வெற்றியளிக்குமா?

‘’ ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் இம்முறையும் நம்பவைத்து கழுத்தறுப்பு செய்துவிட்டனர்.  அவர்களை நம்பி கூட்டணி அமைப்போமானால் நாளை நடுவீதியில் நிற்கவேண்டிய சூழ்நிலைகூட ஏற்படலாம்.’’

-இவ்வாறு கடும் சீற்றத்தோடு, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவிடம் தனது உள்ளக் குமுறல்களை கொட்டித்தீர்த்துள்ளார் பிரசன்ன ரணதுங்க எம்.பி.

நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி அரசின் 2109 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்புமீது கடந்த 12 ஆம் திகதி மாலை வாக்கெடுப்பு நடத்தப்பட்டு மேலதிக 43 வாக்குகளால் அது நிறைவேற்றப்பட்டது.

‘பட்ஜட்’மீது வாக்கெடுப்பு நடைபெறுவதற்கு முதல்நாள்,(11)  கூட்டு எதிரணியின் நாடாளுமன்றக்குழுக் கூட்டத்தை கூட்டினார் மஹிந்த ராஜபக்ச. சுதந்திரக்கட்சி உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

கூட்டத்தின் ஆரம்பத்திலேயே  ‘பட்ஜட்’டிலுள்ள குறைகளைப் பட்டியலிட்டுக்காட்டியுள்ள மஹிந்த ராஜபக்ச, அதற்கு ஆதரவாக வாக்களிக்ககூடாது என்பதே தனது நிலைப்பாடு என்பதை விவரித்தார்.

இதற்கு கூட்டு எதிரணி எம்.பிக்களும் ‘ஆமாம்சாமி’ போட்டனர். சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் சிலர் மௌனம் காத்தனர்.

‘’ பட்ஜட்’டின் இரண்டாம்வாசிப்புமீதான வாக்கெடுப்பின்போது எதிர்த்து வாக்களித்தால், ஜனாதிபதிக்கான நிதி ஒதுக்கீடு தோற்கடிக்கப்படலாம்’’ என சு.க. உறுப்பினர்கள் சிலர் சுட்டிக்காட்டினர்.

‘’ அவ்வாறு எதுவும் நடக்காது. ஐ.தே.கவின் எதிர்த்து வாக்களித்தால்கூட அதை முறியடிப்பதற்கான திட்டம் எம்மிடம் உள்ளது. எதிர்த்து வாக்களிப்பதே சிறந்த முடிவாக அமையும்.’’ என இடித்துரைத்து தனது நிலைப்பாட்டில் உறுதியாக நின்றார் மஹிந்த.

‘’ ஆம். சேர்,  நீங்கள் கூறுவதும் சரிதான். நிச்சயம் நாம் எதிர்த்து வாக்களிப்போம்.’’ என சு.க. உறுப்பினரான டிலான் பெரேரா உறுதியளித்தார். இதையடுத்து ‘பட்ஜட்’டுக்கு எதிராக வாக்களிக்கும் முடிவோடு கூட்டுஎதிரணியின் நாடாளுமன்றக்குழுக் கூட்டம் நிறைவடைந்தது.

இக்கூட்டம் முடிவடைந்தகையோடு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் சுதந்திரக்கட்சியின் விசேடக் கூட்டமொன்று நடைபெற்றது. கூட்டுஎதிரணியின் நாடாளுமன்றக்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை ஜனாதிபதியிடம்  விளக்கினார் டிலான் பெரேரா.

கடுப்பாகிய டிலான்

பொங்கியெழுந்த தயாசிறி

அவ்வேளையில்  குறுக்கீடுசெய்த கட்சியின் பொதுச்செயலாளரான தயாசிறி ஜயசேகர, தற்போதைய அரசியல் சூழ்நிலையில், எதிர்த்து வாக்களிப்பதைவிட, வாக்கெடுப்பில் பங்கேற்காமல் நடுநிலை வகிப்பதே சிறந்த முடிவாக அமையும் என்றார். மஹிந்த அமரவீரவும் இதை ஆமோதித்தார்.

எனினும், போர்க்கொடி  தூக்கிய டிலான் பெரேரா உட்பட  மேலும் சில சுதந்திரக்கட்சி எம்.பிக்கள், ‘பட்ஜட்’டை எதிர்த்தாக  வேண்டும் என்பதில் உறுதியாக நின்றுவாதிட்டனர். இதனால், கடுப்பாகிய தயாசிறி, கட்சி எடுக்கும் முடிவுக்கு உறுப்பினர்கள் கட்டுப்பட வேண்டும் என கடுந்தொனியில் கட்டளை பிறப்பித்தார்.

இவ்வாறு சு.க.  கூட்டத்தில் கடும் சொற்போர் மூண்டதால் குறுக்கீடுசெய்த ஜனாதிபதி, மனசாட்சியின் பிரகாரம் வாக்களிக்குமாறு எம்.பிக்களுக்கு ஆலோசனை வழங்கினார். இதன்பிரகாரமே சுதந்திரக்கட்சியின் குழுவொன்று பட்ஜட்டுக்கு எதிராகவும், மற்றைய குழு வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமலும் இருந்தது.

‘பட்ஜட்’ இரண்டாம் வாசிப்பின்போது நிறைவேற்றப்பட்ட பின்னர், மஹிந்தவை சந்தித்த பிரசன்ன ரணதுங்க எம்.பி.,

‘’ சேர், இது முதல் தடவை அல்ல. இதற்கு முன்னரும் பலதடவைகள் காலைவாரியுள்ளனர். இம்முறை நம்பவைத்து கழுத்தறுப்பு செய்துள்ளனர். இனியும் இவர்களை நம்புவதா, கூட்டணி எல்லாம் எதற்கு? தனி வழியில் தற்போது இருக்குகும் உறுப்பினர்களுடன் பயணிப்போம். சு.க. உறுப்பினர்களின் நிழலைக்கூட இனி நான் நம்பமாட்டேன்.’’  என முறையிட்டார்.

‘’ ஆம். அசிங்கமான வேலையை செய்துவிட்டனர். அவதானமாகவே இருப்போம்.’’ என கூறி பிரசன்னவை, சாந்தப்படுத்தினார் மஹிந்த.

‘பட்ஜட்’மீது எதிர்வரும் 5 ஆம் திகதியே இறுதி வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. தற்போது குழுநிலை விவாதம் நடைபெற்றுவருகின்றது. இறுதி வாக்கெடுப்பில் மைத்திரி தரப்பு, பட்ஜட்டுக்கு எதிராக வாக்களிக்கும் என மஹிந்த தரப்பு நம்புகின்றது.

பட்ஜட்டை தோற்கடிக்காவிட்டாலும் பரவாயில்லை, மஹிந்த, மைத்திரி அணிகள் ஒரே நிலைப்பாட்டில் உள்ளன என்பதை காண்பிக்கவேண்டிய கட்டாய சூழ்நிலை கூட்டு எதிரணிக்கு ஏற்பட்டுள்ளது.

எனவே, 5 ஆம் திகதி சுதந்திரக்கட்சி எதிர்த்து வாக்களிக்கும் பட்சத்திலேயே, இரு தரப்புக்குமிடையிலான புதிய அரசியல் கூட்டணி பேச்சு வெற்றியளிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பட்ஜட்டில் இரண்டாம்வாசிப்புமீதான வாக்கெடுப்பின்போது அதற்கு எதிராக சுதந்திரக்கட்சியை வாக்களிக்க வைப்பதற்கு ( ஒப்பரேசன் -02) மஹிந்த எடுத்த முயற்சி தோல்விகண்டது. எனவே, இரண்டாம் கட்ட ஒப்பரேசன் ( ஏப்ரல் 5 ஆம் திகதி) வெற்றியளிக்குமா என்பது மில்லியன் பெறுமதியான கேள்வியாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *