பாணந்துறையில் பதற்றம் தணிந்தது! ஐவர் கைது!! – தொடர்ந்தும் பலத்த பாதுகாப்பு

பாணந்துறை – சரிக்கமுல்ல – திக்கல பகுதியில் இரண்டு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலை அடுத்து, அந்த பகுதியின் பாதுகாப்பு தொடர்ந்தும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

எனினும், நேற்று இரவு நிலவிய பதற்றநிலை தணிந்துள்ளது. இயல்பு நடவடிக்கை வழமைக்கு திரும்பியுள்ளது.

பாணந்துறை பகுதியில் நேற்று புதன்கிழமை இரவு இரண்டு குழுக்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டிருந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.

வாகன விபத்தொன்றினால் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் வலுவடைந்த நிலையிலேயே, இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் மூவர் காயமடைந்துள்ளதுடன், அவர்கள் பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அத்துடன், சம்பவம் தொடர்பில் நேற்று இரவே ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பாணந்துறை – திக்கல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தை அடுத்து, சிங்களவர் ஒருவருக்கும், முஸ்லிம் ஒருவருக்கும் இடையிலேயே இந்த வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

இதன்போது, நடத்தப்பட்ட தாக்குதலை அடுத்து, மோதல் சம்பவம் வலுப்பெற்றதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

சம்பவத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக சம்பவ இடத்துக்கு விசேட அதிரடிபடையினர் வரவழைக்கப்பட்டனர்.

பாணந்துறை பகுதியின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தொடர்ந்தும் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை பாணந்துறை வடக்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *