பிராந்திய அலுவலகங்களை அமைப்பதில் காணாமல்போனோர் பணியகம் தீவிரம்! – மார்ச் 30இல் மன்னாரில் அமைகின்றது வடக்குக்கான முதல் அலுவலகம்

காணாமல்போனோர் தொடர்பான பணியகத்தின் வடக்குக்கான முதலாவது ‘பிராந்திய அலுவலகம்’ மார்ச் 30ஆம் திகதி மன்னாரில் திறக்கப்படவுள்ளது என்று பணியகத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் புதுச்சுடரிடம் தெரிவித்தார்.

தெற்கில் மாத்தறை மாவட்டத்தை மையப்படுத்தி கடந்த 2 ஆம் திகதி அலுவலகம் நிறுவப்பட்டது.

வடக்கு, கிழக்கு தெற்கு உட்பட நாட்டில் 8 பிராந்திய அலுவலகங்களை அமைப்பதற்குத் திட்டமிட்டுள்ள காணாமல்போனோர் பணியகம், இதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் இவ்வருடத்துக்குள் இறுதிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் இணை அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பிரகாரமே காணாமல்போனோர் பணியகம் அமைக்கப்பட்டது.

கடும் போக்குடைய சிங்கள தேசியவாத அமைப்புகளும், மஹிந்த அணியும் இதற்குக் கடும் எதிர்ப்பை வெளியிட்டன.

இதனால், மேற்பட்டி சட்டவரைவு நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டு சுமார் ஒன்றரை வருடத்துக்குப் பிறகே பணியகத்துக்கான தலைவர் மற்றும் ஏனைய உறுப்பினர்களை 2018 பெப்ரவரி மாதம் 29ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்திருந்தார்.

கடந்த காலத்தில் காணாமல்போனோர் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் விவரங்களை அறிந்துகொள்ளவும், தகவல்களை உறவினர்களுக்குப் பெற்றுக்கொடுப்பதே இக்குழுவின் நோக்கமாகும்.

காணாமல்போனவர்கள் சம்பந்தமாக எதிர்கால நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் தொடர்பாக உரிய அதிகாரிகளுக்குப் பரிந்துரைகளை முன்வைத்தல், காணாமல்போனோர் மற்றும் அவர்களது உறவினர்களின் உரிமைகள் மற்றும் பற்றுதல்களைப் பாதுகாத்துக்கொள்ளல், அறிவுறுத்தல், அரச நிறுவனங்கள் மற்றும் வேறு நிறுவனங்கள் மூலம் கண்டுபிடிப்பதற்கு முடியாமல்போன நபர்களின் விபரங்கள் அடங்கிய தரவுகளைத் திரட்டி மத்திய தரவு வலையமைப்பொன்றை ஏற்படுத்தி கோவைப்படுத்தல் போன்ற பணிகளை இக்குழு முன்னெடுக்கவுள்ளது.

2018 ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத்திட்டத்தில் பணியகம் அமைப்பதற்காகவும் அதன் செயற்பாடுகளுக்காகவும் 1.3 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டது.

வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் பல பகுதிகளுக்கும் பயணம் மேற்கொண்ட காணாமல்போனோர் குறித்தான பணியகத்தின் உறுப்பினர்கள், காணாமல்போனவர்களின் உறவினர்களைச் சந்தித்துக் கலந்துரையாடி சாட்சியங்களைப் பதிவு செய்தனர். இதனை அடிப்படையாகக்கொண்டு இடைக்கால அறிக்கையொன்றையும் முன்வைத்தனர்.

மஹிந்த ஆட்சிக் காலத்திலும் காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக மெக்ஸ்வெல் பரணகம தலைமையில் ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று அமைக்கப்பட்டது. மைத்திரி – ரணில் கூட்டாட்சியிலும் அந்தக் குழு செயற்பட்டு தமது இறுதி அறிக்கையைக் கையளித்தமை தெரிந்ததே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *