காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி முடங்கியது வடக்கு..! – ஹர்த்தால் போராட்டம் வெற்றிகரமாக முன்னெடுப்பு

காணாமல் ஆக்கப்பட்டோரைத் தேடும் உறவுகளின் ஏற்பாட்டில் வடக்கு மாகாணம் முழுவதும் இன்று முன்னெடுக்கப்படுகின்ற பூரண ஹர்த்தால் போராட்டத்துக்கு பல்வேறு தரப்புக்களும் ஆதரவு தெரிவித்துள்ளன.

ஓரணியில் திரண்டுள்ள மக்களால் இன்று ஹர்த்தால் போராட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுகின்றது.

அத்துடன், கிளிநொச்சியில் மாபெரும் கவனயீர்ப்புப் பேரணியும் நடைபெறுகின்றது.

வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் உள்ளூர், வெளியூர் போக்குவரத்துச் சேவைகள், வர்த்தக, வாணிப, வங்கிச் சேவைகள், கல்வி நடவடிக்கைகள் உள்ளிட்ட சகல செயற்பாடுகளும் இன்று முடங்கியுள்ளன. முழு அளவிலான போராட்டத்தால் வடக்கின் இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், ஐ.நா. மனித உரிமைகள் சபை அமர்வில் இலங்கைக்கு மேலும் கால நீடிப்பு வழங்கக் கூடாது என்று வலியுறுத்துகின்றனர்.

அத்துடன் தமது போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளாகின்ற நிலையில், நீதி, தீர்வு கிடைக்கவில்லை என்று குறிப்பிடுகின்றனர்.

இவற்றை வலியுறுத்தியே இன்றைய தினம் வடக்கு மாகாணம் தழுவிய பூரண ஹர்த்தால் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தனர்.

அத்துடன் கிளிநொச்சி கந்தசுவாமி கோயில் முன்பாக காலை ஒன்றுகூடிய உறவுகள் அங்கு கவனயீர்ப்புப் மாபெரும் போராட்டத்தை முன்னெடுத்தனர். அங்கிருந்து டிப்போச் சந்திவரை பேரணியாகச் செல்லும் அவர்கள் ஐ.நா. சபைக்கான மனுவைக் கையளிக்கவுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *