படையினர் போர்க்குற்றங்களில் ஈடுபடவில்லை!

” இலங்கைப்படையினர் போர்க்குற்றங்களில் ஈடுபடவில்லை. குறுகிய அரசியல் நலனுக்காகவே படையினருக்கு எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றது.” என்று முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் தயா ரத்நாயக்க தெரிவித்தார்.

கொழும்பில் இன்று ( 20 ) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

”  நாட்டில் நிலையான சமாதானத்தை மலரச்செய்வதற்காக தம்மை முழுமையாக அர்ப்பணித்த படையினர் தொடர்ச்சியாக கைதுசெய்யப்பட்டுவருகின்றனர்.

கடந்துள்ள மூன்றாண்டுகளில்  33 இராணுவத்தினரும், 17 கடற்படையினரும் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். இராணுவத்தில் மாத்திரம் 637 வீரர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.

படையினருக்கு தண்டனை வழங்கவேண்டாம் என இங்கு கூறமுற்படவில்லை. இருந்தாலும், கைது மற்றும் விசாரணைப் பொறிமுறையே சர்ச்சைக்குரியதாக இருக்கின்றது.

சுயமரியாதை என்பதை உயிர்போல் நேசிப்பவர்கள்தான் படையினர். முப்படையினர், பொலிஸ் அதிகாரிகள், சிவில் பாதுகாப்பு படையினர் என நாட்டுக்காக 30 ஆயிரம்பேர் தமது உயிரை தியாகம் செய்துள்ளனர். மேலும் பலர் உடல் அவயங்களை இழந்துள்ளனர்.

இவ்வாறு நாட்டுக்காக தம்மை முழுமையாக அர்ப்பணித்த படையினர் கௌரவமாக நடத்தப்படவேண்டும். அவர்கள் கைதுசெய்யப்படும் விதமும், விசாரணையும்தான் கவலையளிக்கும் வகையில் உள்ளன.போரின் இறுதிகாலகட்டத்தில் கடற்படைக்கு தலைமைவகித்த அட்மிரல் கரன்னாகொடவை கைதுசெய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாக செய்தி வெளியாகியுள்ளது.

இலங்கையில் ஜனாதிபதி பதவியை வகித்தவர்கள் முதல் முக்கிய அரசியல் பிரமுகர்களை கொலைசெய்த புலிகளுக்கு மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. புனர்வாழ்வளிக்கப்பட்டு அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

ஆனால், சட்டத்தைமீறிய இராணுவத்துக்கு எதிராக பல்வேறு சந்தர்ப்பங்களில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  படையினரை தண்டித்துவிட்டு, நல்லிணக்கத்தை குறுக்குவழியில் அடையமுடியாது.

படையினர் போர்க்குற்றங்களில் ஈடுபடவில்லை என நம்புகின்றோம். அதாவது, திட்டமிட்ட அடிப்படையில் குற்றங்களை அவர்கள் கட்டவிழ்த்துவிடவில்லை.  இராணுவ மற்றும் நாட்டு சட்டத்தைமீறும் வகையில் அவர்கள் செயற்பட்ட சந்தர்ப்பங்களிளெல்லாம் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.” என்றார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *