மலையகத்தில் வாக்குவேட்டை நடத்த ஜனாதிபதி நாடகம்!

“மலையக மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்கு ஆணைக் குழுவொன்றை அமைக்குமாறு ஜனாதிபதியிடம் தமிழ் முற்போக்கு கூட்டணி கோரிக்கை விடுத்திருந்தது.
அக்கோரிக்கையை நிறைவேற்றாமல், பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினையை பகடைக்காயாகப் பயன்படுத்தி,  அரசியல் நாடகமாடி, மலையகத்தில் வாக்கு வேட்டை நடத்துவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தற்போது முயற்சிக்கின்றார்.”
இவ்வாறு ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட எம்.பியுமான வேலுகுமார் சுட்டிக்காட்டினார்.
கல்லோயா இம்புல்பிட்டிய தோட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள “இராஜப்பாபுரம்” வீட்டுத்திட்ட திறப்புவிழா நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே வேலுகுமார் எம்.பி. இவ்வாறு சுட்டிக்காட்டினார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது,
”ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொது வேட்பாளராகக் களமிறங்கிய போது ஓட்டு மொத்த மலையகத் தமிழர்களும் அவருக்கு நேசக்கரம் நீட்டியதுடன், மாற்றத்தை எதிர்ப்பார்த்தே வாக்களித்தனர்.
எனினும், தேர்தல் பரப்புரையின் போது தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு ஜனாதிபதி இன்னும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக மலையகத்தை பிற்போக்கு நிலைக்கு கொண்டு சென்றவர்களுடன் கரம்கோர்த்து ‘கட்சி அரசியலை’ நடத்திவருகிறார் ஜனாதிபதி.
அதுமட்டுமல்ல, நான்கு ஆண்டுகள் கடந்தபின்னரே-  மலையக மக்கள் அவரின் நினைவுக்கு வந்துள்ளனர். சரி, நான்காண்டுகள் கடந்த பின்னராவது மலையக மக்கள் என ஒரு தரப்பினர் இந்த நாட்டில் வாழ்கின்றனர் என்றும், அவர்களுக்கும் பிரச்சினை இருக்கின்றது என்றும் ஜனாதிபதி சிந்திக்க தொடங்கியுள்ளதை வாழ்த்தி வரவேற்கின்றோம்.
இருந்தாலும், மலையகத்தில் வாக்கு வேட்டை நடத்துவதற்கான ஜனாதிபதியின் அரசியல் நாடகமே இதுவென்பதையும் கூறிவைக்க விரும்புகின்றோம்.
இதுவரை காலமும் மலையக மக்களின் பிரச்சினையில் கவனம் செலுத்தாத ஜனாதிபதி, தற்போது நித்திரையிலிருந்து விழித்தெழுந்தவர் போல் செயற்படுவது அரசியலில் எந்த ‘டிசைனை’ சாரும்?
ஒரு மாதத்துக்குள் அறிக்கை வேண்டும், குழு அமைக்கின்றேன். தீர்வை தருகின்றேன் என்றெல்லாம் ஜனாதிபதி கூறுவது ‘அம்புலிமாமா கதை’ போல்தான் இருக்கின்றது.
அப்படியென்றால் மலையக மக்கள் விவகாரத்தில் மூன்றாண்டுகள் வரை ஜனாதிபதி நத்திரை நிலையிலிருந்ததன் மர்மம்தான் என்ன?  மலையக மக்களின் நலனுக்காக ஆழ்நிலை தவத்தில் இருந்தாரோ தெரியவில்லை….
நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி ஆட்சியைக் கவிழ்க்க முடியுமென்றால், பாராளுமன்றத்தைக் கலைக்க முடியுமென்றால் அந்த அதிகாரத்தை தோட்டத்தொழிலாளர்களின் நலனுக்காக ஏன் பயன்படுத்த முடியாது?
பெருந்தோட்டக் கம்பனிகளின் நில உரிமை அரசாங்க வசமே இருக்கின்றது. எனவே, தோட்டங்களை சுவீகரித்து, அவற்றை தோட்டத்தொழிலாளர்களுக்கு பகிர்ந்தளித்து, அவர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக மாற்றுவதற்கு ஜனாதிபதி தனது அதிகாரத்தைப் பயன்படுத்தாதது ஏன்?
மலையக மக்களின் பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்காக ஆணைக்குழுவொன்றை அமைக்குமாறு ஜனாதிபதியிடம் தமிழ் முற்போக்கு கூட்டணி கோரிக்கை விடுத்தது.
எனினும், இது குறித்து ஜனாதிபதி கவனம் செலுத்தவில்லை. மக்கள் பிரதிநிதிகளின் கோரிக்கையை ஏற்காத அவர், தற்போது மூன்றாம் தரப்பின் உதவியை நாடுவது சுயநல அரசியலாகும்.
எமது மக்களுக்கு  நன்மை பயக்குமானால் முதலில் நாம் தான் மகிழ்ச்சியடைவோம்.  எனினும், எமது மக்களை இனியும் வாக்களிப்புக்கான இயந்திரமாக மட்டும் பயன்படுத்துவதற்கு இடமளிக்க முடியாது.
எனவே, தேர்தல் நெருங்கும் வேளையில், மலையக மக்களின் பிரச்சினைகளை ஏலம் போட்டு , அரசியல் குளிர்காய முற்படும் தரப்புகளை அரவணைத்து ‘மெகா’ அரசியல் நாடகத்தை அரங்கேற்றி – சினிமாவில் வசூல் வேட்டை நடத்தப்படுவது போல், வாக்கு வேட்டை நடத்துவதற்கு ஜனாதிபதி முயற்சிக்கின்றார். அதற்கான ஒத்திகைகளே தற்போது நடைபெற்றுவரும் சந்திப்புகளாகும்.” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *