படைகளின் போர்க்குற்றங்களை மறைப்பதற்கு இடந்தர முடியாது! – கஜேந்திரன் சீற்றம்

இறுதிப் போரில் இராணுவம் புரிந்த போர்க்குற்றங்கள், மனித குலத்துக்கு எதிரான குற்றங்களை மறப்போம், மன்னிப்போம் என்ற பேச்சுக்கே இடமில்லை எனக் கூறிய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன், அதனைப் பேசுவதற்குப் பிரதமர் ரணில் விக்கிரம்சிங்கவுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கும் எந்த அருகதையும் இல்லை எனவும் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் கருத்து தெரிவிப்பதற்காக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நேற்று யாழ்.ஊடக அமையத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறியதாவது:-

“அண்மையில் கிளிநொச்சியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டிருந்த பிரதமா் ரணில் விக்கிரமசிங்க, இறுதிப்போாில் இடம்பெற்ற அனைத்தையும் மறப்போம் மன்னிப்போம் எனக் கூறியிருக்கின்றாா்.

அதற்கு ஒத்து ஊதும் விதமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினா் எம்.ஏ.சுமந்திரன், சில நாட்களுக்கு முன்னா் இடம்பெற்ற தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணி மாநாட்டில் உரையாற்றும்போது, போாில் ஈடுபட்ட இரு தரப்பினரும், குற்றங்களைப் புாிந்திருக்கின்றாா்கள் எனவும், மன்னித்து மறப்பதற்குத் தயாராக வேண்டும் எனவும் கூறுகின்றார்.

அதனைச் சொல்வதற்கு நாடாளுமன்ற உறுப்பினா் எம்.ஏ.சுமந்திரனுக்கு எந்த அருகதையும் கிடையாது.

மேலும் சுமந்திரன் வடக்கு, கிழக்கு தமிழ் மக்களுடைய நீதிக்கான எதிா்பாா்ப்பை அடியோடு நிராகாிப்பது மட்டுமல்லாமல், அதை மலினப்படுத்தும் செயற்பாட்டை அப்பட்டமாக செய்து கொண்டிருப்பதையும் அவதானிக்க முடிகின்றது.

இறுதிப் போாில் தமிழீழ விடுதலைப்புலிகள் இலங்கை அரச படைகள் செய்த குற்றங்களுக்கு ஒப்பான குற்றங்களைச் செய்தாா்களா?

அதற்கு மேல் போரின் இறுதியில் கைதுசெய்யப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகளின் தளபதிகளைக் காணவில்லை. அவா்கள் பெரும்பாலும் படுகொலை செய்யப்பட்டுவிட்டாா்கள்.

மிகுதியானவா்கள் புனா்வாழ்வு என்ற பெயாில் மோசமான சித்திரவதைகளைத் தாண்டி வந்துள்ளனா்.

ஆக மொத்தத்தில் குற்றம் செய்யாதவா்கள் தண்டணை பெற்றுவிட்டு வந்திருக்கும் நிலையில் அவா்களை இன்னும் தண்டிக்கவில்லை எனக் காட்டுவதன் ஊடாக உண்மையான குற்றவாளிகளுக்கும், அவா்களுடைய குற்றங்களுக்கும் பிரதமா் ரணில் மட்டுமல்ல, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினா் எம்.ஏ.சுமந்திரனும் வெள்ளையடிக்கப் பாா்க்கின்றாா்.

மேலும், தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணி மாநாட்டில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினா் எம்.ஏ.சுமந்திரன் மிகமோசமான பொய்களைக் கூறுகின்றாா்.

குறிப்பாக ஐ.நா. மனித உாிமைகள் ஆணையகத்தின் தீா்மானங்கள் ஒரு நாட்டைக் கட்டுப்படுத்தாது எனக் கூறும் அவா் இலங்கை அரசு ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையில் எந்த முன்னேற்றத்தையும் செய்யவில்லை எனவும், பாதுகாப்பு சபைக்குக் கொண்டுபோவது அவ்வளவு சுலபமான காாியமல்ல எனவும், ஆனால் கொண்டுபோக முடியாது எனத் தான் கூறவில்லை எனவும் கூறுகின்றார்.

இது மக்களின் காதுகளில் பூ சுத்தும் கதை என்பதுடன், அந்த மாநாட்டில் கலந்துகொண்டிருந்த இளைஞா்களின் காதுகளிலும் அவா் பூ சுத்துகின்றாா்.

ஆகவே, மக்கள் மிகத் தெளிவாக இருக்கவேண்டும். மறப்போம், மன்னிப்போம் என்ற பேச்சுக்கே இங்கு இடமில்லை.

அதனைக் கூறுவதற்கு பிரதமா் ரணிலுக்கோ, நாடாளுமன்ற உறுப்பினா் சுமந்திரனுக்கோ எந்த அருகதையும் கிடையாது” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *