மன்னிப்போம்; மறப்போம்: ரணிலின் அறிவிப்பால் தெற்கு அரசியலிலும் பரபரப்பு

இராணுவத்தினர் போர்க்குற்றம் இழைத்தனர் என்பதை ஒப்புக்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக தெற்கு அரசியலில் கருத்துகள் முன்வைக்கப்பட்டுவருகின்றன.

படையினரை அவர் காட்டிக்கொடுத்துவிட்டார் என மஹிந்த அணியும், கடும் போக்குடைய சிங்கள தேசியவாத அமைப்புகளும் விமர்சனக் கணைகளைத் தொடுத்துள்ளன.

“கடந்த காலங்களில் இருதரப்புகளிலும் தவறுகள் இடம்பெற்றுள்ளன. மறப்போம்’ மன்னிப்போம்” என்ற தொனியில் கிளிநொச்சியில் வைத்து ரணில் விக்கிரமசிங்க கருத்து வெளியிட்டிருந்தார்.

ரணிலின் இந்த அறிவிப்பானது, படையினர் போர்க்குற்றம் இழைத்தனர் என்பதை 10 வருடங்களுக்கு பிறகு அரசு ஏற்றுக்கொண்டுள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

எனினும், தெற்கில் இக்கருத்துக்கு எதிர்ப்புகள் வலுத்துள்ளன. இது தொடர்பில் கருத்து வெளியிட்ட மஹிந்த ராஜபக்ச, விமல் வீரவன்ஸ, உதயகம்மன்பில, தினேஸ்குணவர்தன போன்றோர்,

“பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அண்மையில் வடக்குக்கு மேற்கொண்டிருந்த பயணத்தின் போது, 30 ஆண்டு போரில் போர்க்குற்றங்கள் நிகழ்ந்தன என்று ஒப்புக் கொண்டுள்ளார்.

அந்தக் காலகட்டத்தில் அத்தகைய போர்க்குற்றங்கள் எதுவும் இடம்பெறவில்லை. தீவிரவாதத்தை ஒழிப்பது அடிப்படையில் போர்க்குற்றம் அல்ல.

போர்க்குற்றம் நடந்தது என்று ரணில் விக்கிரமசிங்க கூறியிருப்பது நாட்டைக் காட்டிக் கொடுத்தது போலாகும்.

போரில் இராணுவச் சிப்பாய் அல்லது எந்தவொரு நபரும் ஏதாவது குற்றம் செய்திருந்தால், அவர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகள் மூலம் தேவையான நடவடிக்கைகளை எடுத்தோம்” என்று கூறினர்.

அதேவேளை, கடும்போக்குடைய சிங்கள தேசியவாத அமைப்புகளும், இக்கருத்தைக் கண்டித்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *