ரணிலுடன் பஸில் இரகசிய சந்திப்பு! – மஹிந்த தரப்பில் பெரும் குழப்பம்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அமைப்பாளரும் மஹிந்த ராஜபக்சவின் சகோதரருமான பஸில் ராஜபக்சவுக்கும் இடையில் சில தினங்களுக்கு முன்னர் இரகசிய சந்திப்பும் பேச்சும் இடம்பெற்றிருப்பதாக நம்பிக்கையான வட்டாரங்கள் தகவல் வெளியிட்டிருக்கின்றன.

முன்னாள் ஜனாதிபதியும் எதிர்க்கட்சித் தலைவரும் பொதுஜன பெரமுனவின் உத்தியோகப்பற்றற்ற தலைவருமான மஹிந்த ராஜபக்சவுக்குக் கூடத் தெரியாமல் நடைபெற்ற இந்தச் சந்திப்புப் பற்றிய தகவல் வெளியே கசிந்தமையை அடுத்து மஹிந்த தரப்புக்குள் குழுப்பம் ஏற்பட்டிருப்பதாகவும் அறியவந்தது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் மிகமிக நெருங்கிய இரத்த உறவான ஒரு வர்த்தகரின் கொள்ளுப்பிட்டி இல்லத்தில் இந்தச் சந்திப்பு காதும் காதும் வைத்தால் போல நடந்தேறியிருப்பதாகவும் கூறப்படுகின்றது.

இன்னமும் புலனாய்வுத்துறையுடன் அதீத தொடர்புகளைக் கொண்டிருக்கும் மஹிந்த ராஜபக்சவுக்கு இந்தச் செய்தி அவருக்கே உரிய நம்பகமான வட்டாரங்கள் மூலம் எட்டியருக்கின்றது என்பதும் தெரியவந்துள்ளது.

என்ன விடயம் குறித்துப் பிரதமரும் பஸிலும் பேசினார்கள் என்பது பற்றிய தகவல் ஏதும் வெளியாகவில்லை.

ஜனாதிபதித் தேர்தலில் ‘பொது வேட்பாளர்’ சாத்தியம் குறித்துப் பூர்வாங்கப் பேச்சாக இது இருக்குமோ என்ற ஊகமும் சம்பந்தப்பட்ட வட்டாரங்களில் எழுந்துள்ளதாகத் தெரிகின்றது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வடக்குக்கான மூன்று நாள் விஜயத்துக்கு முன்னர் இந்த இரகசிய சந்திப்பு இடம்பெற்றது என்பதும் அறியவந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *