திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்! மதுஷ் விவகாரத்தில் பொலிஸார் தீவிர தேடுதல் வேட்டை!!

மாக்கந்துர மதுஷ் கைது செய்யப்பட்ட சம்பவத்தையடுத்து புதிய புதிய தகவல்கள் வெளிவர ஆரம்பித்துள்ளன.

ஏற்கனவே நாமல்குமார வெளிப்படுத்திய ஜனாதிபதி படுகொலை சதி விவகாரத்தில் சிக்கிய டீ ஐ ஜி நாலக்க சில்வா – மாக்கந்துர மதுஸுடன் தொடர்புகளை வைத்திருந்தாரா என்பது பற்றி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஏனென்றால் டுபாயில் மதுஷுடன் சிக்கிய பாடகர் அமல் பெரேரா 2016 ஜூலை 21 ஆம்திகதி டீ ஐ ஜி நாலக்க சில்வாவை பார்க்க அவரது அலுவலகம் வந்திருக்கிறார்.

அப்போது அங்கிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் என்ன காரணத்திற்காக வந்தீர்கள் என்று கேட்டிருக்கிறார்.

அந்த கேள்வியில் கோபமுற்ற பாடகர் அமல் பெரேரா , இதனை டீ ஐ ஜி நாலக்க சில்வாவிடம் சொல்லியிருக்கிறார் .

அதனைக் கேட்டு கடும் ஆத்திரமடைந்த டீ ஐ ஜி நாலக்க சம்பந்தப்பட்ட உத்தியோகத்தரை அழைத்து திட்டியதுடன் அவர் மீது ஒழுக்காற்று விசாரணை நடத்தி – கட்டாய லீவில் அனுப்பி – பின்னர் அவரை கல்கிசை பொலிசுக்கு இடமாற்றம் செய்துள்ளார்.

அவ்வளவு நெருக்கமாக டீ ஐ ஜி நாலக்க,அமல் பெரேராவுடன் இருந்த காரணம் என்ன ? மாக்கந்துர மதுஸுடன் இணைந்து அவர் செய்யவிருந்த வேலை என்ன என்பதை ஆராய்ந்த சீ ஐ டியினருக்கு அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைத்துள்ளன.

இந்த தகவல்களை வைத்து – சர்வதேச பொலிஸாருடன் இணைந்து டுபாயில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மதுஷ் மற்றும் அமல் பெரேராவிடம் வாக்குமூலங்களை பதிவு செய்யத் தயாராகிறது சி ஐ டி…

அப்படி பதிவு செய்யப்பட்ட பின்னர் மதுஷ் விவகாரம் இன்னொரு திருப்பத்தை சந்திக்கும்…

அதாவது ஜனாதிபதி கொலை சதி முயற்சியில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் அவர்களை ஒப்படைக்க இலங்கை அரசு உத்தியோகபூர்வமாகவே டுபாயிடம் கேட்கும். நீதிமன்ற விசாரணைகள் முடிந்த கையோடு அவர்களை இலங்கையிடம் ஒப்படைக்கலாம் டுபாய்.

ஒரு நாட்டின் தலைவரை கொலை செய்ய சதி திட்டம் தீட்டியவர்கள் என்று மதுஷ் மற்றும் அவரது சகாக்கள் சிலரை இலங்கையிடம் டுபாய் ஒப்படைத்த தீருமென சொல்கின்றன பாதுகாப்பு வட்டாரங்கள்.

கைது…

இலங்கையில் இன்றும் மதுஷ் சகாக்கள் கைது தொடர்கின்றது…

மதுஷின் இரண்டாவது மனைவியின் தாயாரின் சப்புகஸ்கந்த வீடு இன்று முற்றுகையிடப்பட்டது.

இரண்டாவது மனைவியின் தாயாரின் – அதாவது மாமியின் பெயரில் கோடிக்கணக்கில் பெறுமதியான நவீன ப்ராடோ ஜீப் ஒன்றும் மாமனார் பெயரில் லட்சக்கணக்கில் பெறுமதியான வேன் ஒன்றும் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டு அவை கைப்பற்றப்பட்டன.

எவரும் கைது செய்யப்படவில்லை. ஆனால் இதனுடன் தொடர்புடைய உறவினர் ஒருவரை தேடுகிறது பொலிஸ்.

அதேசமயம் மாளிகாவத்தை அஸ்வர் எனப்படும் ஒருவர் ஆட்டுப்பட்டித் தெருவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். அவர் கஞ்சிப்பான இம்ரானின் நிதி விவகாரங்களை கையாண்டவர் என்று அறியப்பட்டுள்ளது.

அவரிடம் இருந்து போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

வாகன – ஓட்டோ உதிரிப்பாகங்களை விற்பனை செய்யும் கடை ஒன்றை நடத்தி வந்த அவர் இம்ரானின் கொழும்புக்கான நிதி முகாமையாளராக செயற்பட்டாரென சொல்லப்படுகிறது.

இன்னும் பலர் எதிர்வரும் தினங்களில் சிக்குவார்களென பாதுகாப்புத்துறையின் உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவித்தன.

விமான நிலையத்தில் விசேட கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டும் கரையோர பகுதிகளில் கடற்படையின் ஊடாக பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டும் நாட்டில் இருந்து சந்தேக நபர்கள் வெளியில் சென்றுவிடாமல் இருக்க பாதுகாப்பமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்.

டுபாயில்…

பாடகர் அமல் பெரேராவின் சார்பில் விசேட சட்டத்தரணி ஒருவர் ஆஜராக இலங்கையில் இருந்து சென்றாலும் அவர் அங்கு டுபாயின் சட்டத்தரணி ஒருவர் ஊடாகவே ஆஜராக வேண்டும்.

அப்படி சென்றுள்ள இலங்கையின் பிரபல சட்ட நிறுவனம் ஒன்றின் சட்டத்தரணி ஏற்பாடுகளை செய்தாலும் கைது செய்யப்பட்டுள்ளோரின் சேமநலன்களை மாத்திரமே இப்போதைக்கு அவர்கள் கவனிக்கலாம்.

பொலிஸாரின் விசாரணைகள் முடியும்வரை அவர்களால் ஒன்றும் பெரிதாக செய்துவிட முடியாதென சொல்கின்றனர் பாதுகாப்புத் துறையினர்.

அதேசமயம் – இங்கிருந்து சென்ற இளம் சட்டத்தரணி ஒருவர் அமல் மற்றும் நதிமால் பாடிய பாடல்களை தொலைபேசியில் போட்டுக் காண்பித்து அவர்கள் பாடகர்கள் என்று டுபாய் பொலிஸாரிடம் சொன்னபோது –

அமல் மற்றும் நதிமால் டுபாய்க்கு வந்துபோன காலப்பகுதி மற்றும் தங்கியிருந்த இடங்கள் என்பவற்றை பட்டியலிட்ட பொலிஸார் நிகழ்ச்சிகள் ஏதும் இல்லாத காலங்களில் இவர்கள் ஏன் வந்து போனார்கள் என்பதை கூறுமாறு கேட்டுள்ளனர்.

பொலிஸாரின் அந்தக் கேள்வியோடு தனது முயற்சியில் பின்வாங்கினார் அந்த இளம் சட்டத்தரணி.

மறுபுறம் மதுஷ் மற்றும் அமல் வீட்டாரின் அழைப்பின்றி இந்த இளம் சட்டத்தரணி எப்படி – ஏன் டுபாய் போனார் என்பது குறித்து தேட ஆரம்பித்திருக்கிறது இலங்கை பொலிஸ்.

அவர் சிலகாலம் சிறையில் மதுஸுடன் இருந்தவர் என்பது அறியப்பட்டுள்ளது.

இதற்கிடையில் மதுஷின் பினாமி பெயரில் இலங்கையில் உள்ள சொத்துக்களை அடையாளம் கண்டுள்ள பொலிஸ் எதிர்வரும் நாட்களில் அவற்றை முற்றுகையிடும் என சொல்லப்படுகிறது.

– சிரேஷ்ட ஊடகவியலாளர் ஆர்.சிவராஜா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *