மன்னார் மனிதப் புதைகுழி எச்சங்களின் காபன் அறிக்கை மேலும் தாமதமடையும்!

அமெரிக்காவுக்குக் காபன் பரிசோதனைக்காக அனுப்பப்பட்ட, மன்னார் மனித எச்சங்கள் தொடர்பாக காபன் அறிக்கையை வழங்க மேலும் சில நாட்கள் தாமதமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்ட நீதிமன்றத்துக்கு மின்னஞ்சல் மூலம் இந்தத் தகவலை அமெரிக்க நிறுவனம் அனுப்பி வைத்துள்ளது.

மன்னார் சதொச நிறுவனத்துக்குச் சொந்தமான கட்டடத்திலிருந்து தோண்டி எடுக்கப்பட்ட 300 மனித எச்சங்களில் தெரிவு செய்யப்பட்ட 6 மனித எச்சங்கள் காபன் பரிசோதனைக்காகக் கடந்த ஜனவரி 23ஆம் திகதி மன்னாரிலிருந்து கொழும்புக்குக் கொண்டு வரப்பட்டு விமானம் மூலம் அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள பரிசோதனை நிலையமொன்றில், அவை சோதனைக்குட்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்தப் பரிசோதனையின் காபன் அறிக்கையை இரண்டு வாரங்களில் வழங்கப்படுமெனச் சொல்லப்பட்டிருந்தது.

இதனையடுத்து, காபன் முடிவு தொடர்பான எதிர்பார்ப்பு பல தரப்பிலும் ஏற்பட்டிருந்தது.

மன்னார் மாவட்ட நீதிமன்றில் இது தொடர்பில் நடக்கும் வழக்கை அவதானிக்கப் பல்வேறு இடங்களிலிருந்தும் பலர் வந்திருந்தனர்.

எனினும், அடுத்த வாரமே காபன் அறிக்கையை அனுப்ப முடியும் என அமெரிக்க நிறுவனம் மின்னஞ்சல் மூலம், மன்னார் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளது. எனினும், தாமதத்துக்கான காரணத்தை அந்த மின்னஞ்சலில் குறிப்பிடவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *