மாக்கந்துர மதுஷ்: வெளிவரும் தகவலால் அதிர்ச்சியில் அரசு! – ஸ்பெஷல் ரிப்போர்ட்

டுபாயில் கைதுசெய்யப்பட்ட பிரபல போதைப்பொருள் வர்த்தகர் – பிரபல பாதாள உலகக் குழுத் தலைவர் மாக்கந்துர மதுஷ் உட்பட்ட சகாக்கள் கைது விவகாரத்தில் வெளிவந்துகொண்டிருக்கும் தகவல்களால் இலங்கை அரசே அதிர்ந்து போயிருக்கின்றது.

அரசியல்வாதிகள்

அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை மற்றும் உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்கள் எனக் கிட்டத்தட்ட எழுபது பேருக்கும் மேற்பட்ட அரசியல்வாதிகள் தன்னுடன் தொடர்பில் இருந்தனர் என்று மதுஷ் வாக்குமூலத்தை டுபாய் பொலிஸாரிடம் அளித்துள்ளார்.

மதுஷின் கைப்பற்றப்பட்ட தொலைபேசியில் இருந்து கிடைத்த தொலைபேசி இலக்கங்களில் இருந்தும் பல முக்கியமான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. அந்த விபரங்கள் தேசிய பாதுகாப்பு சபையின் கூட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வழங்கப்பட்டுள்ளன.

ஒரு அமைச்சர் சில காலங்களுக்கு முன்னர் மதுஷின் இலங்கை மனைவிக்கு தொழில் வாய்ப்பைப் பெற்றுக் கொடுத்துள்ளார். மதுஷ் வெளிநாடு செல்லவும் அவரே உதவிகளை வழங்கினார் எனவும் தெரியவந்துள்ளது.

அதேபோல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் சிலர் மதுஷ் கோஷ்டியுடன் நேரடித் தொடர்புகளைப் பேணி வந்துள்ளனர். அவர்களின் மாதாந்த செலவுகளை மதுஷே கவனித்து வந்திருப்பது விபரமாக ஜனாதிபதியின் கைகளுக்குச் சென்றிருக்கின்றது எனத் தகவல்.

இதைவிட பிரதேச அரசியல்வாதிகள் பலர் மதுஷின் போதைப்பொருள் வர்த்தகத்தில் பங்குகொண்டிருப்பதும் தெரியவந்துள்ளது.

இவற்றுக்கப்பால் மதுஷின் பணத்தைப் பெற்று அவரை மறைமுக பங்குதாரியாக்கி வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடும் ஒருதொகை முன்னணி வர்த்தக பிரமுகர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

மாதந்தோறும் கிட்டத்தட்ட 3 கோடி ரூபாவுக்கும் மேல் தனது போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் கப்பம் பெறுவதில் மதுஷ் இலாபம ஈட்டி வந்துள்ளார் எனச் சொல்லப்படுகின்றது.

வர்த்தகர்கள்

பல முன்னணி வர்த்தகர்கள் தமது எதிரி வர்த்தகர்களை இலக்கு வைத்து அவர்களை வீழ்த்த மதுஷின் உதவியை நாடி பெருந்தொகை பணத்தை வழங்கியிருப்பதும், குறித்த வர்த்தகர்களிடம் இருந்து மதுஷ் பெருமளவில் பணம் பெற்றிருப்பதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மிரிஸ்ஸ சன்ஸைன் சுத்தா, ரொட்டுவே அமில ஆகியோரிடம் கிடைத்த தகவலையடுத்து கந்தர ஜங்காவின் வீட்டில் நேற்று வெள்ளிக்கிழமை தேடுதல் நடத்தப்பட்டது. அதன்போது இராணுவ சீருடைகளும் ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. பல கொள்ளைச் சம்பவங்களையும் இவர்கள் நடத்தியுள்ளனர் எனத் தெரியவந்துள்ளது.

மதுஷின் மாக்கந்துர இல்லத்திலும் நேற்றுத் தேடுதல் நடத்தப்பட்டுள்ளது. அவரின் முதல் மனைவி – மனைவியின் பெற்றோர் ஆகியோரிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன.

இராஜதந்திர கடவுச்சீட்டு உள்ள பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கைதுசெய்யப்பட்டார் என்று கூறினாலும் அது தவறான தகவல் என இப்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால், ஐக்கிய நாடுகள் அமைதிப்படையில் கடமையாற்றிய பொலிஸ் அதிகாரி ஒருவர் அங்கிருந்து நேரடியாகவே இந்தப் பிறந்த நாள் நிகழ்வுக்கு வருகை தந்துள்ளார். அவரே இராஜதந்திர சிறப்புரிமை கொண்டவர் என்பதை டுபாய் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

கொழும்பில் மாளிகாவத்தை பாடசாலை அதிபர் ஒருவர் கைது என்று வந்த செய்தியும் தவறானதென சொல்லப்படுகின்றது. அவர் பாடசாலை ஒன்றின் அபிவிருத்தி சங்கத் தலைவராவார். அழகுசாதனப் பொருட்களை விற்பனை செய்யும் அவர் நண்பர் ஒருவரின் அழைப்பின் பேரில் இந்த விருந்துக்கு சென்று சிக்கிக் கொண்டுள்ளார் எனத் தகவல்.

கம்புறுப்பிட்டி பிரதேச சபையின் ஊழியர் ஒருவரே சிக்கியுள்ளார். பிரதேச சபை உறுப்பினர் எவரும் கைதாகவில்லை எனத் தெரியவந்துள்ளது.

125 பேர் கலந்துகொண்ட இந்த நிகழ்வில் போதைப்பொருள் பாவனை குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டவர்களில் எட்டு பேர் இரத்த மாதிரி பரிசோதனையின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர் .

எப்படி சிக்கினார் மதுஷ்?

சிறு வயதில் ஏழ்மை வாழ்க்கையை வாழ்ந்து பெற்றோரின் துணையின்றி வாழ்க்கை நடத்திய மதுஷ், மரக்காலை ஒன்றையும் நடத்தியிருந்தார். அரசியல்வாதி ஒருவரைக் கொலை செய்த சம்பவத்தில் சிறை சென்றதையடுத்தே அவரின் வாழ்க்கை திசை மாறியது. நெருக்கடிகள் அதிகரிக்க அவர் இந்தியாவுக்குப் படகில் சென்று அங்கிருந்து டுபாய் சென்றார் எனத் தகவல்.

டுபாயில் இருந்து பாதாள உலகக் குழுவை இயக்கிய மதுஷ் எதிரிகளைப் போட்டுத் தள்ளினார். தனது நம்பிக்கையான சகாக்களை அரவணைத்து அவர்களை டுபாய்க்கு வரவழைத்து கவனித்துக் கொண்டார். தமிழ் சினிமா படங்களைப் பார்ப்பது அவரது முக்கிய பொழுதுபோக்கு எனச் சொல்லப்படுகின்றது.

டுபாயில் மிகுந்த பாதுகாப்புடன் இருந்த அவருக்கு உலகளாவிய ரீதியில் தொடர்பு ஏற்பட்டது. தாவூத் இப்றாகீம் போன்றோரின் தொடர்புகள் அவருக்கு இருந்ததாக ஆரம்பகட்டத் தகவல்கள் சொல்லியிருக்கின்றன.

இப்போதும் சுமார் 14 இற்கும் மேற்பட்ட சட்டத்தரணிகள் மதுஷின் விடுதலைக்காகப் போராடி வருகின்றனர். அதேபோல டுபாய் ஆட்சியாளர்களுக்கும் இவரை விடுதலை செய்ய அழுத்தங்கள் வந்துகொண்டிருக்கின்றன.

2012ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் கொல்லப்பட்ட கழுதுஷாரவின் மனைவி திலினி நிஷாயா திலகரத்னவின் அழகில் மயங்கிய மதுஷ் அவரை டுபாய்க்கு வரவழைத்தார். அவரைத் திருமணம் செய்து அஜித் அவங்க்க என்ற பெயரில் வாழ்ந்து வந்தார். அவரின் மகனுக்கு நடந்த பிறந்த நாள் நிகழ்வே இது.

வாரந்தோறும் டுபாயில் உள்ள வழிபாட்டுத் தலம் ஒன்றுக்கு செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்த மதுஷ், அங்கிருந்தே பின்தொடரப்பட்டுள்ளார். புலனாய்வுத்துறை அங்கிருந்தே அவரைக் கண்காணிக்க ஆரம்பித்தது.

டுபாயில் உள்ள இலங்கையர்களுக்கு கைவீசி உதவிகளைச் செய்த மதுஷ், அவரைப் பின்தொடர்ந்த – டுபாயில் தொழில் தேடுவது போல நடித்த இலங்கை விசேட அதிரடிப்படை வீரர் ஒருவருக்கும் உதவிகளைச் செய்து வந்தார். அதே பின்னர் அவருக்குப் பொறியானது.

இனி…?

இப்போது மதுஷ் மற்றும் சகாக்களை இலங்கை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு மற்றும் வெளிநாட்டு அமைச்சின் செயலாளர்கள் தமது செல்வாக்கைப் பயன்படுத்தி அதில் இறங்கியுள்ளனர்.

போதைப்பொருள் விடயத்தில் கடும் சட்டங்களைக் கொண்டுள்ள அமீரகத்தில் அவர்களின் ஆரம்பகட்ட விசாரணைகள் முடிந்த பின்னரே இவர்களை இலங்கையிடம் ஒப்படைப்பதா? இல்லையா? என்பது தீர்மானிக்கப்படும்.

ஆனால், யார் என்ன சொன்னாலும் அவர்களைக் கொண்டுவந்து விசாரணைகளை நடத்தி மரணதண்டனையை அவர்களில் இருந்து ஆரம்பிக்க ஜனாதிபதி மைத்திரி உறுதியாக இருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.

“நீங்கள் இருந்து பாருங்கள். மரணதண்டனையை நிறைவேற்றுவேன் என்று சொல்லிக்கொண்டிருக்க மாட்டார் ஜனாதிபதி. போதைப்பொருள் வழக்கில் மரணதண்டனை பெற்ற ஒருவருக்கு தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டது என்று ஒரு நாள் செய்தி வரும். அப்போது எல்லோரும் அதிர்ந்து போவார்கள்” என்று கூறுகின்றார் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரி ஒருவர்.

ஜோதிடம் மற்றும் சுபநேரங்களில் நம்பிக்கை கொண்டிருந்த மாக்கந்துர மதுஷின் கெட்ட நேரம் சிக்கிக் கொண்டார். அது பொலிஸாரின் நல்ல நேரம்.

மதுஷின் உதவியைப் பெற்று வாழ்ந்தவர்களின் பாடு இனி பெரும்பாடுதான்….!

– சிரேஷ்ட ஊடகவியலாளர் ஆர். சிவராஜா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *