இந்த அரசும் தீர்வு தராது! – அமைச்சர் ரிஷாத் திட்டவட்டம்

“தற்போதைய அரசோ, ஜனாதிபதியோ, பிரதமரோ ஒரு தீர்வுத் திட்டத்தைத் தருவார்கள் என்ற நம்பிக்கை எனக்குக் கிடையாது. நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அரசமைப்புப் பிரேரணை பல்வேறு படிமுறைகளைத் தாண்டவேண்டியுள்ளது. அரசின் எஞ்சிய ஆயுட்காலத்துக்குள் அது சாத்தியமாகுமென்று நான் நினைக்கவில்லை.”

– இவ்வாறு தெரிவித்தார் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிஷாத் பதியுதீன்.

வவுனியா கலாசார மண்டபத்தில் நேற்று மாலை அவருக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு விழாவிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் உயர்பீட உறுப்பினர் முத்து முஹம்மது தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அமைச்சர் மேலும் தெரிவித்தவை வருமாறு:-

“நாடாளுமன்றத்தில் பிரதமரினால் சமர்ப்பிக்கப்பட்ட புதிய அரசமைப்பு தொடர்பான நிபுணர் குழுவின் அறிக்கை குறித்து தென்னிலங்கையில் மிகவும் மோசமான பிரசாரங்கள் முடுக்கிவிடப்பட்டு வருகின்றன.

இது நாட்டைப் பிரிவினைக்கு இட்டுச்செல்லுமென தென்னிலங்கையில் இனவாதப் பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தமிழர் பிரதேசத்தில் ஒருவகையான பிரசாரம் – முஸ்லிம் பிரதேசத்தில் இன்னுமொரு வகையான பிரசாரம், தென்னிலங்கையில் இனவாதத்தைத் தூண்டும் பிரசாரம் என்று இந்த நகல் அறிக்கையானது ஆளுக்கொரு விதத்தில் கூறுபோடப்பட்டு ஒவ்வொரு சாராரும் தத்தமது அரசியல் இருப்புக்காகவும் ஆதாயத்துக்காகவும் அதனைக் கையில் எடுத்துள்ளனர்.

தமிழில் ஒன்றிருப்பதாகவும் சிங்களத்திலே வேறொன்று இருப்பதாகவும் ஊடகங்கள் சிலவும் இந்தப் பிரசாரங்களை வரிந்து கட்டிக்கொண்டு முன்னெடுத்து வருகின்றன.

ஜனாதிபதித் தேர்தலை மையமாகக் கொண்டு தென்னிலங்கையின் சில கட்சிகள் இதனை ஒரு கருவியாக எடுத்து – இல்லாத பொல்லாத விடயங்களைச் சோடித்து – கதைகளைக் கட்டவிழ்த்துள்ளன.

எப்படியாவது இந்தத் தீர்வுத் திட்ட முயற்சியை இல்லாமலாக்க வேண்டுமென மேற்கொள்ளப்பட்டு வரும் இந்தச் சூழ்நிலையில் வெறுமனே நூறு ஆசனங்களைப் கொண்ட பிரதமர் தலைமையிலான அரசு எவ்வாறு இதனை நிறைவேற்றப் போகின்றது?

அத்துடன் 85 ஆசனங்களைக் கொண்ட மஹிந்த தரப்பினர் இதற்கு முட்டுக்கட்டையாக இருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் எஞ்சிய நாடாளுமன்ற ஆயுட்காலத்துக்குள் எவ்வாறு அரசு இதனை நிறைவேற்றப் போகின்றது?

நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் பிரதான கட்சிகளுக்கிடையில் எதிரும் புதிருமான நிலைப்பாடுகளும், ஏட்டிக்குப்போட்டியான செயற்பாடுகளும் தொடர்ந்து கொண்டிருக்கும்போது இதனை நிறைவேற்றுவது சாத்தியமாக தென்படவில்லை .

அதுமாத்திரமன்றி 2/3 பெரும்பான்மை அதாவது 150 வாக்குகளால் இது நிறைவேற்றப்படவேண்டும் . அத்துடன் சர்வஜன வாக்கெடுப்பொன்றின் மூலம் மக்களின் அங்கீகாரம் பெறப்படவேண்டும்.

இந்த இக்கட்டான நிலையில் தீர்வுத்திட்டம் பற்றிய ஒரு நம்பிக்கையை இந்த அரசின் காலத்தில் நாம் எதிர்பார்க்க முடியுமா?

தேர்தல் வந்துவிட்டால் தீர்வுத் திட்டத்தை அப்படி உருவாக்குவோம் – இப்படி உருவாக்குவோம் என்று வாக்குறுதி தரும் நிலையே இருந்து வருகின்றது.

இந்த நாட்டிலே வடக்கிலே இளைஞர்கள் ஆயுதம் ஏந்திப் போராடியமைக்கும் தென்னிலங்கையில் இளைஞர்கள் ஆயுதக் கிளர்ச்சி நடத்தியமைக்கும் மூல காரணம் பேரினத்து அரசியல்வாதிகளே. இவ்வாறான பிரச்சினைகளின் ஆரம்ப கர்த்தாக்களும் அவர்களேதான்.

எனவே, இந்த நாட்டிலே இனப்பிரச்சினைக்கு முடிவு கட்டப்பட்டு நிரந்தரமான சமாதானம் ஏற்பட வேண்டுமெனில் மூவின மக்களினது பிரதிநிதிகளும் மனம் விட்டுப் பேசி எல்லோருக்கும் பொருத்தமான ஒரு தீர்வு திட்டம் உருவாக்கப்பட்டு அதனை நாடாளுமன்றத்திற்கு கொண்டுவந்து நிறைவேற்றவேண்டும். இதுவே காலத்தின் தேவையாக இருக்கின்றது” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *