பெண்கள் குறித்து சர்ச்சை: கிரிக்கெட் வாரியம் அதிரடி

‘காபி வித் கரண்’ தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் ஹர்திக் பாண்டியா, லோகேஷ் ராகுல் ஆகியோர் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகள் தெரிவித்தது பெரும் பிரச்சினையாக விசுவரூபம் எடுத்துள்ளது.

வீரர்கள் தங்களது செக்ஸ் பழக்கம் குறித்து வெளிப்படையாக பேசியது இந்திய கிரிக்கெட்டின் நன்மதிப்பை குலைப்பதாகும் என்று இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் உட்பட பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

சர்ச்சையில் சிக்கிய இரண்டு வீரர்களையும் விசாரணை முடியும் வரை இடைநீக்கம் செய்து இந்திய கிரிக்கெட் வாரியம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

அவுஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ள அந்த இருவரையும் உடனடியாக நாடு திரும்ப இந்திய கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் வீரர்கள் இருவரின் பேச்சுக்கும் இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

“இந்த மாதிரியான விடயங்களை நாங்கள் நண்பர்களுடன் கூட பேசமாட்டோம். ஆனால், இவர்களோ பலரும் பார்க்கும் டெலிவிஷன் நிகழ்ச்சியில் இப்படி பேசி இருக்கிறார்கள்.

தற்போது இதனைப் பார்த்த பொதுமக்கள் கிரிக்கெட் வீரர்கள் பற்றி என்ன நினைப்பார்கள். ஹர்பஜன்சிங்கும் இதுபோல் தானோ?, டெண்டுல்கர், கும்ப்ளே போன்றோரும் இப்படித்தான் இருப்பார்களோ என்று நினைக்கக்கூடும்.

இந்திய அணிக்கு வந்து குறுகிய காலமே ஆன ஹர்திக் பாண்டியா அணியின் கலாசாரம் குறித்து எப்படி பேச முடியும்.

இரண்டு வீரர்களையும் இடைநீக்கம் செய்து இந்திய கிரிக்கெட் வாரியம் எடுத்த நடவடிக்கை சரியானதுதான்.

இதுபோன்ற விடயங்களில் இந்திய கிரிக்கெட் வாரியம் இப்படித்தான் கடுமையான நடவடிக்கையை தொடர்ந்து எடுக்க வேண்டும்.

இந்த தண்டனை எதிர்பார்த்ததுதான். இதில் எனக்கு ஆச்சரியம் எதுவுமில்லை.

இந்திய அணியின் பஸ்சில் இவர்கள் இருவரும் பயணித்தால், எனது மனைவி அல்லது குழந்தை என்னுடன் வந்தால் நிச்சயம் இவர்களுடன் இணைந்து பயணிக்க மாட்டேன்.

பெண்களை ஒரே ஒரு கோணத்தில் மட்டும் பார்ப்பது சரியானது கிடையாது” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *