பதவி ஆசை வெறியால் பேரினவாதப் படுகுழிக்குள் வீழ்ந்துவிட்ட மைத்திரி!

“இனவாதத்தைக் களைந்து, நல்லிணக்கத்தை ஏற்படுத்துவேன் என்ற உறுதிமொழியோடு அதிகாரத்துக்கு வந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொடர்ந்தும் ஆட்சி அதிகாரத்தில் நீடிக்க வேண்டும் என்ற பதவி ஆசை வெறியால் பேரினவாதப் படுகுழிக்குள் வீழ்ந்து விட்டார். இனி அவரது போக்கும் நோக்கும் முழுமையாக பேரினவாதமாகத்தான் இருக்கப்போகின்றது என்பது நிச்சயம்.”

– இவ்வாறு இன்று (18.12.2018) வெளிவந்துள்ள ‘காலைக்கதிர்’ பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

கடைசியில் வழமை போல தாமும் கூட தென்னிலங்கையின் பெளத்த, சிங்கள பேரினவாதப் போக்குடைய சராசரி அரசியல்வாதி என்பதைக் காட்டிவிட்டார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.

தமிழர் தரப்பு – குறிப்பாக வடக்கு, கிழக்குத் தமிழர்களின் தலைவர்கள் – எதிர்பார்க்காத, நம்பமுடியாத ஓர் உரையை அவர் ஆற்றியிருக்கின்றார்.

2005 ஜனவரியில் இந்த நாட்டின் சிறுபான்மை மக்கள் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் மாற்றம் ஒன்றை ஏற்படுத்தினார்கள்.

சிறுபான்மையினரான தமிழர்களும் முஸ்லிம்களும், பெரும்பான்மையினரான சிங்களவர்களில் கணிசமான தொகையினரோடு சேர்ந்து தென்னிலங்கை ஆட்சிப்பீடத்தில் பலரும் எதிர்பாராத அதிரடி அதிகார மாற்றம் ஒன்றை ஏற்படுத்தினர்.

பெளத்த, சிங்களப் பேரினவாதத்தின் உச்சியில் நின்ற மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிப்பீடத்தை யாரும் எதிர்பார வகையில் வீழ்த்தி, இனசெளஜன்னியத்துக்கும், மத நல்லிணக்கத்துக்கும், மொழிப் புரிந்துணர்வுக்குமான ஆட்சிப்பீடம் ஒன்றை அவர்கள் ஏற்படுத்தினர் என்று மகிழ்ந்தனர்.

கடைசியில் தாங்கள் பிடிக்கப் போன பிள்ளையார் குரங்காய்த்தான் வந்து முடிந்திருக்கின்றது என்பதை அவர்கள் உணரும் நிலைமைதான் இப்போது ஏற்பட்டிருக்கின்றது.

அண்மையில் கூட தமிழர்களின் தலைவரான – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா.சம்பந்தனைச் சந்தித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, “நான் இந்த நாட்டின் ஜனாதிபதியாவேன் என்று நினைத்துக் கூடப் பார்த்ததில்லை. அப்படிப்பட்ட என்னை இன்று இந்தக் கதிரைக்குக் கொண்டு வந்தவர்கள் வடக்கு, கிழக்கில் மாத்திரமல்லாமல், இலங்கை முழுவதிலும் இருக்கும் தமிழர்களும்தான். அவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து எனக்கு வாக்களித்து, என்னை இந்தப் பதவிக்குக் கொண்டு வந்தமையை மறக்கவே மாட்டேன்” – என்று கூறிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று வார்த்தை தவறிவிட்டார்.

ரணில் விக்கிரமசிங்க பிரதமராகப் பதவியேற்ற நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆற்றிய உரை பச்சை இனவாதப் போக்குடையது.

போர் வெற்றியைத் தேடித் தந்த எந்த இராணுவ வீரனையும் தண்டிக்க இடமளிக்கமாட்டேன் என்றும் – இராணுவத்தினரைத் தண்டித்துக் கொண்டு விடுதலைப்புலிகளை (தமிழ் அரசியல் கைதிகள்) விடுவிப்பதா என்றும் – வெளிநாட்டில் இருக்கும் விடுதலைப்புலிகளைத் தண்டிக்க வேண்டும் என்றும் அவர் ஆற்றிய உரை இந்த நாட்டில் இன அமைதியையும், சமாதானத்தையும், நல்லிணக்கத்தையும், புரிந்துணர்வையும் ஏற்படுத்தும் ஒரு தலைவனுக்குரிய கருத்து நிலைப்பாட்டை பிரதிபலிப்பனவல்ல என்பது தெளிவு.

எந்த பெளத்த, சிங்கள மேலாதிக்கமும் பேரினவாதப் போக்குடைய தென்னிலங்கை ஆட்சித் தலைமையை வீழ்த்தி மைத்திரிபால சிறிசேனவை அதிகாரத்துக்குத் தமிழர்களும் சேர்ந்து கொண்டு வந்தார்களோ அந்தத் தரப்போடு மைத்திரிபால சிறிசேன தானும் இப்போது சேர்ந்திருந்து கொண்டு அதே பண்பியல்பைப் பிரதிபலித்து, கொக்கரித்து நிற்கின்றார் என்பதே நிலைமை.

மஹிந்த ராஜபக்ஷ தரப்போடு சேர்ந்து அதே பாணியில் பேரினவாத மேலாதிக்கப் போக்கைப் பின்பற்றி அரசியல் செய்தால் தொடர்ந்து அதிகாரத்திலும், பதவியிலும் நீடிக்கலாம் என்ற நப்பாசை மைத்திரிபால சிறிசேனவையும் பேரினவாதக் குழிக்குள் வீழ்த்தி விட்டது போலும்.

அண்மைக்காலத்தில் இதுவரை கோட்டாபய ராஜபக்ஷவைச் சுற்றி நின்ற பேரினவாத சக்திகள், தரப்புகள் எல்லாம் இப்போது மைத்திரிபால சிறிசேனவுக்குப் பின்னால் அணிதிரளத் தொடங்கிவிட்டன என்றும் கொழும்புச் செய்திகள் சுட்டிக்காட்டுகின்றன.

இனவாதத்தைக் களைந்து, நல்லிணக்கத்தை ஏற்படுத்துவேன் என்ற உறுதிமொழியோடு அதிகாரத்துக்கு வந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொடர்ந்தும் ஆட்சி அதிகாரத்தில் நீடிக்க வேண்டும் என்ற பதவி ஆசை வெறியால் பேரினவாதப் படுகுழிக்குள் வீழ்ந்து விட்டார்.

இனி அவரது போக்கும் நோக்கும் முழுமையாக பேரினவாதமாகத்தான் இருக்கப்போகின்றது என்பது நிச்சயம்.

அந்தத் தரப்பில் ஏனையோரிலும் விட அதிகளவில் இனவாதம் கக்குவதன் மூலம் – பேரினவாத மேலாண்மைச் செருக்குடன் நடப்பதன் வாயிலாக அவர்களின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் தானேதான் என்பதை உறுதிப்படுத்துவதற்காக மேலும் மேலும் இனவாதத்தை அவர் உமிழ்வார். அதை எதிர்கொள்வதைத் தவிர, அவரை ஆட்சிக்குத் தானும் சேர்ந்து கொண்டு வந்த தமிழருக்கு வேறு வழியில்லை – என்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *