வடக்கு, கிழக்கில் படைமுகாம்களின் அருகே பாரிய மனிதப் புதைகுழிகள்! – சர்வதேச கண்காணிப்பின் கீழ் அகழ்வுப் பணி வேண்டும் என வலியுறுத்து

வடக்கு, கிழக்கில் பாதுகாப்புப் படையினர் நிலைகொண்டிருந்த அனைத்து இடங்களிலும் பாரிய மனிதப் புதைகுழிகள் காணப்படலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக வடக்கு மாகாண முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

எனவே, படையினர் வெளியேறியுள்ள இடங்களில் சர்வதேச கண்காணிப்பின் கீழ் அகழ்வுப் பணிகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மன்னார் மனிதப் புதைகுழி விவகாரம் சர்வதேச மட்டத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அது
தொடர்பாக மன்னாரில் நேற்று ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-

“மன்னார் மனிதப் புதைகுழியிலிருந்து கடந்த வாரம் இரும்புக் கம்பியினால் கட்டப்பட்ட நிலையில் மனித எச்சம் கண்டுபிடிக்கப்பட்டது. இதிலிருந்து எமது மக்கள் எவ்வளவு கோரமாக சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு அடிமைகளாகக் கொல்லப்பட்டிருக்கின்றார்கள் என்பது புலனாகின்றது.

இந்த மனித எச்சங்கள் தமிழர்கள் என்ற காரணத்திற்காகக் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டுக் கொல்லப்பட்டவர்களாக இருக்கலாம் என்று சந்தேகிக்கின்ற நிலையில் இந்த உண்மை வெளிச்சத்துக்கு வரவேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.

இந்தப் புதைகுழி தொடர்பான மர்மங்கள் வெளிவருவதன் ஊடாகப் பல உண்மைகள் வெளிவரும் வாய்ப்புகள் உருவாகும் என்று நம்புகின்றோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *