இ.தொ.காவின் அரசியல் அணுகுமுறை இன்னமும் அரிச்சுவடி மட்டத்தில்- முற்போக்கு கூட்டணி குற்றச்சாட்டு!

தெற்காசியாவிலேயே மிகப்பெரிய தொழிற்சங்கம் என மார்தட்டிக்கொள்பவர்களின் தொழிற்சங்க நடவடிக்கை – அணுகுமுறையெல்லாம் இன்னும் அரிச்சுவடி மட்டத்தில் இருப்பது வேதனைக்குரிய விடயமாகும். எனவே, இனியாவது தூரநோக்கு சிந்தனையுடன் – விட்டுக்கொடுப்புடன் செயற்பட முன்வரவேண்டும் – என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், தமிழ் முற்போக்க கூட்டணியின் கண்டிமாவட்ட எம்.பியுமான வேலுகுமார் அழைப்பு விடுத்தார்.

இதுதொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு,

நாட்டில் உத்தியோகபூர்வ அரசாங்கமொன்று இல்லாத நிலையிலும்,  அரசியல் நெருக்கடி தலைதூக்கியுள்ள வேளையிலும் தொழிற்சங்க நடவடிக்கையில் இறங்குவது பொருத்தமற்ற செயற்பாடு – தீர்மானம்  என  முன்கூட்டியே நாம் சுட்டிக்காட்டினோம்.

எனினும், தோட்டத்தொழிலாளர்களுக்கான  சம்பள விடயத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு அக்கறை இல்லை. அதனால்தான் போராட்டத்தை தடுக்க முற்படுகின்றது  என மக்கள் மத்தியில் பிரிவினையை விதைத்து, அவர்களை எம்மிடமிருந்து தூரப்படுத்துவதற்காக – பிரித்தாளும் சூழ்ச்சியை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கையாண்டது.

இதனால் போராட்டக்களத்தில் குதிப்பதற்குரிய தருணம் இதுவல்ல என தெரிந்தும், மக்கள் நலனைக்கருதி – அவர்களுக்க நம்பிக்கையளிப்பதற்காக போராட்டத்தை ஆதரிக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால்  இன்று என்ன நடந்துள்ளது? போராட்டத்துக்கான அறைகூவலை விடுத்தவர்களே  அதை வாபஸ்பெற்று மூக்குடைபட்டு நிற்கின்றனர்.  எமது கோரிக்கைக்கு  செவிசாய்த்திருந்தால் தற்போது விழிபிதுங்கி – தொழிற்சங்க கோமாளிகள்போல் காட்சிதரவேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் அன்றே தூரநோக்கு சிந்தனையுடன் செயற்பட்டிருந்தால் தோட்டத்தொழிலாளர்களின் நாட்சம்பளம் இந்நேரம் ஆயிரத்தை தாண்டியிருக்கும். ஆனால், குறுகிய அரசியல் இலாபத்துக்காக எதிர்காலம் தொடர்பில் சிந்திக்க தவறிவிட்டனர்.

அதுமட்டுமல்ல  இன்று பேரம் பேசும் சக்தியையும் இழந்துவிட்டனர். தெற்காசியாவிலேயே மிகப்பெரிய தொழிற்சங்கம் என மார்தட்டிக்கொள்பவர்களின் தொழிற்சங்க நடவடிக்கை – அணுகுமுறையெல்லாம் இன்னும் அரிச்சுவடி மட்டத்தில் இருப்பது கவலைக்குரிய விடயமாகும்.  அவ்வாறு இல்லாவிட்டால் பொருத்தமற்ற சூழ்நிலையில் போராட்டத்துக்கான அறைகூவல் விடுக்கப்படுமா என்ன?

எனவே, ‘இனியும் தம்மால் முடியாது’ என்ற கட்டத்துக்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் வந்துவிட்டது. ஆகவே, இனியாவது விட்டுக்கொடுப்புடன் செயற்படவேண்டும். மக்களுக்காக மூன்றாம் தரப்புகளையும் அரவணைக்கவேண்டும். கூட்டுஒப்பந்தத்தில் கைச்சாத்திடாத தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளுக்கும் செவிசாய்க்கவேண்டும்.

அதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், முதலாளிமார் சம்மேளனத்துக்குமிடையே எதிர்வரும் 19 ஆம் திகதி பேச்சு வார்த்தை நடைபெறவுள்ளதாகவும் இதன்போது சம்பளப் பிரச்சினைக்கு இறுதி தீர்வு காணப்படும் என்றும் இ.தொ.கா. நம்பிக்கை வெளியிட்டுள்ளது. எதுஎப்படியோ இம்முறையாவது தொழிலாளர்களால் முன்வைக்கப்பட்டுள்ள சம்பளத் தொகை கோரிக்கை நிறைவேற்றப்படவேண்டும். மாறாக கடந்த காலங்களில்போல் ஏமாற்றம் அரங்கேறக்கூடாது’’ என்று மேற்படி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *