யாழில் ‘ஜிம்’முக்குள் புகுந்து ஆவாக்குழு அடாவடி! பெற்றோல் குண்டுகளை வீசி தீவைத்து எரிப்பு!!

யாழ். சுன்னாகம் பொலிஸ் நிலையம் அமைக்கப்படவிருந்த வீட்டு வளாகத்துக்குள் புகுந்த 10 பேர் கொண்ட கும்பல், அங்கு இயங்கும் ‘ஜிம்’ (உடல்வலுவூட்டல்) நிலையத்தை அடித்துச் சேதப்படுத்தியதுடன், பெற்றோல் குண்டுகளை வீசித் தீ வைத்து எரித்து அடாவடியில் ஈடுபட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தின் பின்னணியில் ஆவா குழுவே செயற்பட்டுள்ளது என்று பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. நேற்று மாலை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த இடத்தில் பொலிஸ் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பை வெளியிட்டு வரும் நிலையிலும், பொலிஸார் சம்பவ இடத்துக்கு வருகை தருவதில் காட்டிய தாமதமும் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது.

சுன்னாகம் பொலிஸ் நிலையம் தற்போது அமைந்துள்ள தனியார் காணி விடுவிக்கப்பட்டுபொலிஸ் நிலையத்தைச் சுன்னாகம் கே.கே.எஸ். வீதியில் ஜெட் மோட்டோர்ஸ் என்ற இடத்தில் மாற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தன.

அந்தக் காணியில் தற்போது ‘ஜிம்’ பயிற்சி நிலையம் இயங்கி வருகின்றது. அந்த இடத்தில் பொலிஸ் நிலையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஒரு தரப்பினர் நேற்றுக் கவனவீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்தனர். இந்தநிலையில் பொலிஸ் நிலையம் அமைக்கத் திட்டமிட்டிருந்த வளாகத்துக்குள் நேற்று மாலை புகுந்த முகத்தில் துணிகட்டிய 10 பேர் கொண்ட கும்பல், அங்கு இயங்கி வந்த ‘ஜிம்’ பயிற்சி நிலையத்தை அடித்துச் சேதப்படுத்தியுள்ளது. அத்துடன், பெற்றோல் குண்டுகளை வீசி தீ வைத்து எரித்துள்ளது. அதனால் அது தீப்பிடித்தது.

யாழ்ப்பாணம் மாநகர சபையின் தீயணைப்புப் படை வரவழைக் கப்பட்டு தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. சம்பவத்தை அடுத்து சுன்னாகம் பொலிஸாருக்கும் தகவல் வழங்கப்பட்டது.

அவர்கள் தீயணைப்புப் படை வருகைதந்து தீயைக் கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வந்த பின்னரே அங்கு வருகை தந்தனர் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மற்றும் அதிரடிப் படையினரும் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *