‘தமிழீழம்’ மலர்வதைத் தடுத்துநிறுத்தவே மஹிந்தவை பிரதமராக்கினார் மைத்திரி! – எஸ்.பி. போட்டார் புதிய குண்டு

வடக்கு – கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டு தமிழீழம் மலர்வதைத் தடுக்கவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மஹிந்த ராஜபக்‌ஷவைப் பிரதமராக்கினார் என அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது:-

“நாட்டின் சொத்துகளைப் பாதுகாக்கவும், வீழ்ச்சி அடைந்துள்ள பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பவும், நாட்டில் சமஷ்டி ஆட்சி உருவாகுவதைத் தடுக்கவும், வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டு தமிழீழம் மலர்வதைத் தடுக்கவுமே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ரணிலை அகற்றி மஹிந்த ராஜபக்‌ஷவைப் பிரதமராக்கினார்.

எனவே, இதனைப் பொறுப்பேற்காது இருந்திருந்தால் அடுத்த ஏழு, எட்டு மாதங்களில் பிரதமர் பதவி இலகுவாகக் கிடைத்திருக்கும். அதனைவிட்டு தாய் நாட்டுக்காகவே மஹிந்த ராஜபக்ஷ இதனைப் பொறுப்பேற்றுள்ளார்.

தற்போது நாடாளுமன்றத்துக்குள் சண்டியர்களும் வருகை தந்துள்ளனர். ஆகவே, நாடாளுமன்றத்தில் முன்னெடுக்கப்படும் எந்த நடவடிக்கையும் சட்டரீதியானதல்ல.

ஜனாதிபதியால் பிரதமர் ஒருவர் நியமிக்கப்பட்டால் அதனை சபாநாயகர் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆனால், சபாநாயகர் அதனைச் செய்யத் தவறியுள்ளார்” – என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *