மாவீரர்களை நினைவுகூர சகலரும் அணி திரளுங்கள்! – சிவாஜிலிங்கம் அழைப்பு

“தமிழர்களின் இதயத்தில் வாழும் தலைவர் பிரபாகரனை எந்த ஆட்சியாளர்களாலும் அடக்கவோ அல்லது இல்லாமல் செய்யவோ முடியாது என்பதை அடக்குமுறையாளர்கள் உணர்ந்து கொள்ளவேண்டும்.”

– இவ்வாறு தெரிவித்த வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், இன்றைய மாவீரர் நாளில் மாவீரர்களை நினைவுகூருவதற்கு பல்லாயிரக்கணக்கில் மக்கள் திரள வேண்டுமென்றும் அழைப்பு விடுத்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தமிழினத்தில் தேசியத் தலைவர் பிரபாகரனின் 64ஆவது பிறந்த தின நிகழ்வை வல்வெட்டித்துறை ஆலடியிலுள்ள அவருடைய இல்லத்திலே கொண்டாடுவதற்கு முயற்சியெடுத்திருந்தோம். இதற்கமைய அந்தக் காணியைத் துப்பரவு செய்வதற்கு நான்கு தொழிலாளிகளை அனுப்பியிருந்தபோது அவர்களைக் கடமை செய்யவிடாது தடுத்து அடையாள அட்டைகளையும் பறித்து அங்கிருந்து செல்லுமாறு அவர்களை விரட்டியனுப்பியிருந்தனர்.

அங்கு இரவு முதல் பொலிஸார் குவிக்கப்பட்டு இந்த நிகழ்வைத் தடுப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர். பொலிஸார் அப் பகுயில் அதிகளவில் குவிக்கப்பட்டனர்.

நாங்கள் மூவர் ஓட்டோவில் சென்றபோது அவர்கள் உடனடியாக எம்மைச் சுற்றிவளைத்து நாம் கொண்டு சென்ற கேக் உள்ளிட்ட பொருட்களைப் பறிக்க முயன்றார்கள்.

ஆனால், நான் அதனைக் கொடுக்கவில்லை. அப்போது இங்கு பிறந்த நாள் நிகழ்வு செய்ய முடியாது என்று பொலிஸார் கூறியிருந்தனர். இதனையடுத்து அங்கிருந்து வெளியேறி வல்வெட்டித்துறை தீருவில் பொதுப் பூங்காவுக்குச் சென்று அங்கு வைத்து கேக்கை வெட்டுவதற்கு ஆயத்தமாகியபோது எம்மைப் பின்தொடர்ந்து வந்த பொலிஸார் அங்கு நின்றிருந்தவர்களைச் சுற்றிவளைத்து நாம் கொண்டு சென்ற பொருட்களைப் பறிமுதல் செய்திருந்தனர்.

எங்களையும் கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றார்கள். எம்மைத் தொடர்ந்து தடுத்து வைத்தால் சட்டம் ஒழுங்கு சீர்குலையும் என்று கூறி எம்மை விடுவித்தனர்.

இன்று மாவீரர் தினத்தை அனுஷ்டிப்போம் என்று நான் கூறியபோது அதைப் பற்றிப் பிரச்சினையில்லை என்றும் பொலிஸார் கூறினார்கள்.

தாயகத்தில் மட்டுமல்லாது உலகெங்கும் வாழும் தமிழர்களின் இதயத்தில் பிரபாகரன் வாழ்கிறார். அதனை எந்த ஆட்சியாளர்களாலும் அகற்ற முடியாது அல்லது இல்லாமல் செய்ய முடியாது என்பதை அடக்குமுறையாளர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

போரிலே கொல்லப்பட்ட எங்கள் மாவீரர்கள் அத்தனை பேரையும் நினைவு கூரும் நிகழ்ச்சிகள் தாயகத்தில் மாத்திரமல்ல புலம்பெயர் தேசங்களிலும் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. இதற்கமைய தாயகத்திலே உணர்வுபூர்வமாக இந்த மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதற்கு முன்வரவேண்டும்.

எந்தத் தடைகள் வந்தாலும் அவற்றை உடைத்தெறிந்து பல்லாயிரக்கணக்கிலே திரண்டு மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த முன்வரவேண்டுமென்றும் தமிழ்ச் சொந்தங்களைக் கேட்டுக் கொள்கிறேன்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *