மாவீரரின் இலட்சியத்துக்காக ஒன்றுபட்டுப் பயணிப்போம்! – கூட்டமைப்பு எம்.பி. சிறிதரன் அறைகூவல்

மாவீரர்களின் இலட்சியத்துக்காகத் தமிழர்கள் ஒன்றுபட்டு பயணிக்க வேண்டும் என தமிழ்த் தேசிய மாவீரர் நாளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் அறைகூவல் விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“மாவீரர் நாள் என்பது வெறுமனே மரணித்தவர்களை நினைவுகூரும் சாதாரண நாள் அல்ல. தாயக விடுதலையை தம் உயிரினும் மேலாக நேசித்து அந்த இலட்சியத்துக்காக போராடி மடிந்த எமது தேசத்தின் விடுதலை வீரர்களை நெஞ்சிருத்தி அஞ்சலிக்கும் புனித நாள். இந்தநாளை தியாகிகளின் திருநாளாகவும், தேசத்தின் பெருநாளாகவும், எமது போராட்டத்தின் எழுச்சி நாளாகவுமே உலகெங்கிலுமுள்ள தமிழர்கள் உணர்வெழுச்சியுடன் அஞ்சலித்து வருகிறார்கள்.

தாயக தேசத்தின் விடுதலைக்காக களமாடி மடிந்த ஆயிரமாயிரம் புலி வீரர்களை எமது வீர மண்ணின் மார்பினைப் பிளந்து புதைத்துள்ளோம். உயிரற்ற சடலங்களாக அவர்கள் மண்ணிற்குள் மறையவில்லை. விடுதலையின் விதைகளாகவே இன்றும் உறங்கிக்கொண்டிருக்கிறார்கள். தமிழீழம் என்ற சுதந்திரதேசம் வரலாற்றின் குழந்தையாக பிறப்பெடுக்க வேண்டும் என்ற பேரவாவில் ஆயிரமாயிரம் தனிமனித உயிர்கள் சரித்திரக் கருவுலத்தில் சங்கமித்தன. அவ்வுயிர்கள் அனைத்தும் கருவாகி, காலத்தால் உருவம் பெற்று, என்றோ ஓர்நாள் தேசத்தின் சுதந்திரமாக வடிவம் பெற வேண்டும் என்பதே எம் ஒவ்வொருவரினதும் எதிர்பார்ப்பு. அத்தகைய சுதந்திர தேசத்தின் ஆன்மாவாகவும், ஆளுமையாகவும் மாவீரத்தெய்வங்கள் என்றென்றும் எம் மனங்களில் வாழ்வார்கள்.

எமது மண்ணில் எமது மக்கள் சுதந்திரமாக, கௌரவமாக, நிம்மதியாக வாழ வேண்டும். நாம் பிறந்து, வளர்ந்த, வாழ்ந்த மண், எமது மூதாதையர்களின் பாதச்சுவடு பதிந்த மண், எமது பண்பாட்டு வேர் ஆழப் பதிந்திருக்கும் எமது மண் எமக்கே சொந்தமாக வேண்டும் என்ற குறிக்கோளுக்காகவே மாவீரர்கள் மடிந்தார்கள். அந்நிய ஆதிக்க விலங்குகளால் கட்டுண்டு கிடந்த எமது தாயக மண்ணை தன்னாட்சி உரிமை மிக்க சுதந்திர புமியாக மாற்ற வேண்டும் என்பது மட்டுமே புலிகள் இயக்கத்தினதும், போராளிகளினதும், மாவீரர்களினதும் சத்திய இலட்சியமாய் இருந்தது.

உலக வரலாற்றில் எங்கேயும், எவராலும் நிகழ்த்தப்படாத அர்ப்பணிப்புக்களும், தியாகங்களும் இந்த மண்ணில், இந்த மண்ணுக்காக மாவீரர்களால் அரங்கேற்றப்பட்டிருக்கிறது என்பதே ஈழவிடுதலைப் போராட்டத்தின் மிகப்பெரிய பலம். அத்தகைய வீரகாவியத்தை படைத்த மாவீரர்களின் இலட்சியக்கனவு, அவர்களின் ஆத்மதாகம் என்றோ ஒருநாள் உருப்பெறும் என்று இதயத்தின் ஏதோ ஓர் மூலையில் இன்னமும் ஒட்டிக்கொண்டிருக்கும் ஒருசொட்டு நம்பிக்கைத் துகளினாலேயே இன்றளவும் ஒவ்வொரு தமிழர்களும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

ஒருநாட்டின் முழுப் படைபலத்தையும், ஆயுதபலத்தையும், தேசியவளத்தையும் ஒன்று திரட்டி பயன்படுத்தி பழைமையும், புதுமையும் வாய்ந்த எமது பாரம்பரிய பூமியை தகர்த்து, அதன் பொருள் வளத்தையும், பண்பாட்டுச் சின்னங்களையும் சிதைத்து, தமிழர்களின் தேசிய வாழ்வை சீர்குலைத்து விடுவதற்காக புலிகள்தான் தமிழர், தமிழர் தான் புலிகள் என்ற வரலாற்று உண்மையை மறந்து புலிகளுக்கெதிராக என்ற பெயரில் தமிழருக்கெதிராக விஸ்வரூப பரிமாணம் பெற்றிருந்த இன அழிப்புப் போரில் மனித ஈகத்தின் உச்சங்களையெல்லாம் கடந்து நிற்பது மாவீரர்களின் தியாகங்களே!

விடுதலை என்பது ஒரு அக்கினிப் பிரவேசம், நெருப்பு நதிகளை நீந்திக்கடக்கும் நீண்ட பயணம், அது தியாகத்தின் தீயில் குதிக்கும் யாகம் என்ற தலைவரின் சிந்தனைக்கு செயல்வடிவம் கொடுத்து விடுதலை வேள்விக்கு தமது இன்னுயிர்களை தியாகித்து, சருகாக மிதிபட்ட தமிழன் மலையாக எழுந்து நிமிர்ந்த தேசிய எழுச்சிக்கு மூச்சாகி நின்ற மாவீரச்செல்வங்களின் ஈகம் ஈழவிடுதலைக் காவியத்தின் ஒவ்வொரு பக்கத்திலும், ஒவ்வொரு அத்தியாயத்திலும், ஒவ்வொரு பந்தியிலும் நெருப்புவரிகளால் எழுதப்பட வேண்டியது.

புலிகள் எப்போதும் போரை விரும்பியவர்களோ, அகிம்சையை வெறுத்தவர்களோ அல்ல. அவர்கள் விடுதலை என்ற இலட்சியத்தை இலகுவாக தேரந்தெடுக்கவில்லை. வரலாறு தான் அதை கட்டாயமாக அவர்களிடம் கையளித்தது. சுதந்திரம் வேண்டுவதைத்தவிர வரலாறு எமக்கு வேறு வழிகள் எதனையும் விட்டுவைக்கவில்லை என்பதை தமிழினத்தலைவர் பிரபாகரன் அவர்கள் அடிக்கடி சொல்லிக் கொள்வதுண்டு.

ஓயாத புயலாக வீசிய ஒடுக்குமுறையின் கோரத்தாண்டவமே விடுதலைப்பாதையில் புலிகளை தள்ளிவிட்டது. இன அழிப்பின் தாங்கமுடியாத நெருக்குவாரங்களின் காரணமாக தமது வல்லமைக்கு மிஞ்சிய வல்லாதிக்க சக்திகளை எதிர்த்தெனும் விடுதலை பெற்ற மனிதர்களாய் வாழ்வதற்கு முடிவுசெய்த புலிகளின் இலட்சிய உறுதிக்கு முன்னால் எந்த வல்லரசாலும் எழுந்து நிற்க முடியாமல்ப் போனது என்பது வரலாற்று உண்மை.

தர்மத்தின் வழிதழுவி ஒரு சத்திய இலட்சியத்திற்காக செய்யப்படும் தியாகங்கள் ஒருபோதும் வீண்போவதில்லை. மாவீரர்களின் அளப்பரிய ஈகத்தின் ஆத்மசக்தியே இன்றளவும் உலகம் வாழ் தமிழர்களை இயக்கிக்கொண்டிருக்கிறது. அச்சக்தியே தமிழின அழிப்பின் மீதான உலகத்தின் மனச்சாட்சியை உலுப்பிவிட்டிருக்கிறது. எமது மாவீரர்களின் சுதந்திர தாகம் சாவுடன் தணிந்து போக வில்லை. அது எமது இனத்தின் வீர விடுதலைக்குரலாக எப்போதும் ஒலித்துக்கொண்டிருக்கும்.

வடக்கு, கிழக்கில் இன்றுவரை நிலவும் கொடூரமான யதார்த்தப் புறநிலைகள், காணாமல் போனோரைக் கண்டறியவும், காணி விடுவிப்பு கோரியும் நிகழும் மக்களின் அகிம்சைவழிப் போராட்டங்கள், இராணுவ ஆக்கிரமிப்பு, ஆயுதப் படைகளின் அனர்த்தங்கள், இயல்புநிலை தோன்றாத அவல வாழ்வு, எமது மக்கள் எதிர்கொள்ளும் அவசரமான மனிதாபிமான தேவைகள் என இவை எவையுமே ஆட்சி, அதிகார பீடங்களால் கண்டுகொள்ளப்படாத நிலையில் முடிவற்றதொரு துன்பியல் நாடகமாவே தமிழரின் அவல வாழ்வு இன்றும் தொடர்கிறது.

இனப்பிரச்சினைக்கு தீர்வு காண நாம் முயற்சிப்பதும், பேரினவாத கட்சிகள் அதை எதிர்ப்பதுமான சிங்கள அரசியல் வரலாற்று நாடகம் கடந்த ஐந்து தசாப்தங்களுக்கு மேலாக நடந்துகொண்டே இருக்கிறது. இலங்கையில் மாறிமாறி ஆட்சிபீடம் ஏறும் இரு பெரும் சிங்கள அரசியற் கட்சிகளுமே தமிழினத்துக்கெதிரான விபரீத அரசியல் நாடகத்தின் இயக்குநர்கள். இந்த இனவாத நாடகத்தின் கதாநாயகர்கள் காலத்திற்குக்காலம் மாறியபோதும் கதையின் கருப்பொருள் மாறவேயில்லை என்பதுதான் கசப்பான உண்மை. தற்போது தென்னிலங்கையில் உருவாகியிருக்கும் அரசியல் நெருக்கடி கூட இந்த கபடநாடகத்தின் அப்பட்டமான வௌிப்பாடுதான்.

தமிழர்களைப் பகடைக்காய்களாக்கி ஆடப்பட்டுவரும் இந்த சதுரங்க விளையாட்டின் எதிர்விளைவாக அன்றுமுதல் இன்றுவரை எத்தனையோ சமரச முயற்சிகள் பாழடிக்கப்பட்டும், எத்தனையோ பேச்சுவார்த்தைகள் முறிக்கப்பட்டும், எத்தனையோ உடன்பாடுகள் கிழித்தெறியப்பட்டும், எத்தனையோ ஒப்பந்தங்கள் செயலிழந்து செத்துப்போயும் கூட காலத்தால் மோசமாகித் தொடரும் தமிழரின் அவல வாழ்வில் இன்றுவரை அதே அரசியல் நாடகங்கள் அரங்கேற்றப்பட்டு வருகின்றமை வேதனையளிக்கிறது.

ஒடுக்குமுறையின் கொடுமைகளுக்கு ஆளாகி இலட்சியத்தால் ஒன்றுபட்ட மக்களை எந்தவொரு சக்தியாலும் அசைக்க முடியாது என்ற தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் சிந்தனையை உண்மையாக்கும் இன்றைய புனிதம் நிறைந்த புனிதர்களின் நாளை எமது இதயங்களில் பதித்து இனவிடுதலை என்ற சத்திய இலட்சியத்திற்காக கொள்கைப்பற்றோடும், இலட்சிய உறுதியோடும் இறுதிவரை பயணிப்போம் என்று மாவீரத் தெய்வங்களின் மீது ஒவ்வொரு தமிழர்களும் உறுதியெடுத்துக்கொள்வோமாக!” – என்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *