மைத்திரி – மஹிந்த கூட்டு பயணத்துக்கு முடிவு கட்டுவேன் – ரணில் சபதம்!

நாடாளுமன்ற சம்பிரதாயங்களை எட்டிஉதைத்துவிட்டு, அரசமைப்பை அப்பட்டமாக மீறும் வகையில் செயற்படும் மைத்திரி, மஹிந்த கூட்டணியின் பயணத்துக்கு முடிவுகட்டுவதற்காக அனைத்துக்கட்சிகளுடனும் இணைந்து செயற்பட தயார் என்று ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று அறிவித்தார்.

நிறைவேற்று அதிகாரத்தின் தாண்டவத்தால் ஜனநாயகத்துக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள நிலையில் அதை பாதுகாப்பதற்காக கொழும்பு விகாரமஹாதேவி பூங்காவில் சத்தியாக்கிரக போராட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. சிவில் அமைப்புகள், தொழிற்சங்கங்கள் என பலதரப்புகளும் இப்போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

போராட்டக்களத்துக்கு இன்று விரைந்த ரணில் விக்கிரமசிங்க அங்கு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.

” இலங்கை அரசியல் வரலாற்றில் முதல் தடவையாகவே இவ்வாறு நாடாளுமன்ற சம்பிரதாயத்தை எட்டிஉதைத்துவிட்டு, அரசமைப்பை மீறும் வகையில் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. அவை தடுத்து நிறுத்தப்படவேண்டும்.

நாடாளுமன்றத்தில் மக்கள் பிரதிநிதிகளே இருக்கின்றனர். ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை வாக்களிப்புமூலம் அவர்களை தெரிவுசெய்யும் வாய்ப்பு மக்களுக்கு கிடைக்கின்றது.  முன்கூட்டியே தேர்தல் நடத்தப்படவேண்டுமானால், கட்சி தலைவர்களை அழைத்து பேச்சு நடத்தியிருக்கலாம். அவ்வாறு செய்யாமல், மக்கள் ஆணைக்கு முரணான வகையில் நிறைவேற்று அதிகாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது.எனவே, அரசமைப்பை நாம் அனைவரும் பாதுகாக்க வேண்டும்” என்றும் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார்.

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *