கூட்டமைப்பின் நடுநிலை மஹிந்தவுக்கு ஆதரவாகாது! – இப்படிக் கூறுகின்றார் கஜேந்திரகுமார்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றில் நடுநிலை வகிக்க வேண்டும் எனக் கேட்பது மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவான நிலைப்பாடாக ஒருபோதும் அமையாது எனத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறியுள்ளார்.

அவ்வாறு கூறுகிறவர்கள் தங்களின் மாற்று திட்டம் என்ன? அதனால் தமிழ் மக்களுக்குக் கிடைக்கும் நன்மை என்ன? என்பதையும் கூறட்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் நேற்று மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது:-

“நாடாளுமன்றில் இன்று ஐக்கிய தேசியக் கட்சி 105 ஆசனங்கள் வைத்திருக்கின்றது. அதேபோல் பொதுஜன பெரமுன 96 ஆசனங்களை வைத்திருக்கின்றது. ஆக மொத்தத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளிக்காவிட்டாலும்கூட ஐ.தே.க. அதிகபடியான ஆசனங்களை வைத்திருக்கின்றது.

ஏதோ மஹிந்த பெரும்பான்மையைப் பெற்றுவிடப் போகின்றார், ஆகவே, ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதற்காக ஐ.தே.கவுக்கு ஆதரவளிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளிக்காட்ட நினைக்கின்றது.

மஹிந்த, ரணில், மைத்திரி ஆகிய 3 பேரும் தமிழர்களால் நிராகரிக்கப்பட வேண்டியவர்கள். அவ்வாறு நிராகரிக்கப்பட வேண்டியவர்களில் ஒருவருக்கு ஆதரவளிப்பதுடன், அவரைக் காப்பாற்றி அரசின் அங்கமாகச் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றவர்கள் எம் மீது முன்வைக்கும் விமர்சனங்கள் குறித்து மக்கள் தெளிவாக இருக்கவேண்டும்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *