65 வயதைக் கடந்தவர்களின் அடுத்த தலைமுறைக்கு 3 ஆண்டுகள் ‘போனஸ்’ !

`65 வயதுக்கு மேற்பட்டு வாழும் ஒவ்வொருவரின் அடுத்தடுத்த தலைமுறைக்கும் தன் முந்தைய தலைமுறையைவிட மூன்று ஆண்டுகள் ஆயுள்காலம் அதிகரிக்கிறது எனத் தெரியவந்துள்ளது.

 

காற்று, நீர், உணவு, சுற்றுச்சூழலைப் பொறுத்தே உயிரினங்கள், மக்களின் ஆயுள்காலம் அமைகின்றன என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. ஆனால், ஒவ்வொரு தலைமுறைக்கும் ஆயுள்காலம் வேறுபடுவதாக சில ஆய்வறிக்கைகள் சொல்கின்றன. அதிலும் குறிப்பாக, தலைமுறைதோறும் ஆயுள்காலம் குறைந்துகொண்டே வருவதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், இதுபோன்ற கருத்துகளுக்கு முற்றிலும் மாறுபட்ட ஒரு முடிவைத் தந்துள்ளது சமீபத்திய ஓர் ஆய்வு.

கலிபோர்னியாவின் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகம் (Stanford University) மற்றும் சீனாவின் ஹூசாங்க் பல்கலைக்கழகம் (huazhong university) இணைந்து அண்மையில் ஆய்வொன்றை  நடத்தியது. அந்த ஆய்வின் முடிவில், ஒவ்வொரு தலைமுறையினருக்கும், அதற்கு முந்தைய தலைமுறை மனிதர்களைவிட மூன்று வருடம் அதிக ஆயுள் இருக்கும் என்று தெரியவந்துள்ளது.

20 தொழில்மயமான நாடுகளில், 1960 முதல் 2010 ஆண்டுவரை வாழ்ந்தவர்களின் ஆயுள்காலத்தை அடிப்படையாக வைத்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 65 வயதுக்கு மேற்பட்டு வாழும் ஒவ்வொருவரின் அடுத்தடுத்த தலைமுறைக்கும், தன் முந்தைய தலைமுறையைவிட மூன்று ஆண்டுகள் ஆயுள்காலம் அதிகரிக்கிறது எனத் தெரியவந்துள்ளது. தலைமுறை இடைவெளியை, 25 ஆண்டுகள் என்ற அடிப்படையில், இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளனர் ஆய்வாளர்கள்.

இதற்கு முன்பு வெளியான ஆராய்ச்சிகளில், நவீனமயமாதலின் காரணமாக ஒவ்வொரு தலைமுறைக்கு இடையிலும், சராசரி ஆயுட்காலம் குறைந்து வருவதாகச் சொல்லிக்கொண்டிருந்தது. ஆனால், அதற்கு நேர்முரணாக அமைந்திருக்கிறது இந்த ஆய்வு முடிவு. “ஆய்வு மேற்கொண்ட 20 நாடுகளிலும், இந்த `மூன்று ஆண்டுக்கால ஆயுள் அதிகரிப்பு’ ஒத்துப்போகிறது. எனவே, எந்த விதத்திலும் இந்த ஆய்வு பொய்யாக இருக்காது. மனிதர்களின் சராசரி ஆயுள்காலம், ஒவ்வொரு 25 வருடத்துக்கும் மூன்று ஆண்டுகள் வீதம் அதிகரித்து இருக்கிறது. நிச்சயமாகக் குறையவில்லை” என்று ஆராய்ச்சியாளர் பேராசிரியர் ஸ்ரீபட் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *